Friday, September 26, 2008
அமெரிக்க நிதி சுனாமியால் ஐ.டி., ஊழியர்கள் கலக்கம்
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதிச் சுனாமியால் தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, ஆந்திராவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், சில்கூர் பாலாஜி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிச் சுனாமி காரணமாக அங்குள்ள முக்கிய வங்கிகள் திவாலாகியுள்ளன. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.ஆந்திராவில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்களுக்கான பணிகளைச் செய்து வருகின்றன. இவற்றில் பலர் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நிதிச் சுனாமி காரணமாக, புதிய "புராஜெக்ட்' எதையும், இங்குள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளிக்கவில்லை.ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தங்களின் "அவுட் சோர்சிங்' பணிக்கான செலவை பெருமளவு குறைத்து விட்டன. இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பெண், ஐதராபாத் அருகே உள்ள சில்கூர் பாலாஜி கோவில் நிர்வாகிகளை தொடர்பு கொண்டார். நிதிச் சுனாமி பிரச்னை தீர்ந்து எங்கள் வேலை நிலைக்க சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டார். கோவிலில் சிறப்பு பூஜை : இதையடுத்து, சில்கூர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த விஷயம் அறிந்து, ஐதராபாத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கோவிலுக்கு படையெடுத்து வரத் துவங்கி விட்டனர். கம்ப்யூட்டர் தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களும் ஏராளமாக குவிந்து விட்டனர். சிறப்பு பூஜையின் போது இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு, நிதிச் சுனாமி பிரச்னை சுமுகமாக தீர்ந்து எங்கள் வேலை நிலைக்க வேண்டும் என, பாலாஜியிடம் மனம் உருக வேண்டிக் கொண்டனர்.
Labels:
அமெரிக்கா,
தகவல் தொழில்நுட்பம்,
வர்த்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment