Tuesday, December 30, 2008

பிச்சை எடுக்கும் சகோதரர்கள்: கல்விக்காக ஏங்கும் பரிதாபம்


விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில், பிச்சை எடுக்கும் சகோதரர்கள் படிப்புக்காக ஏங்கித் தவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், கப்பியாம்புலியூர் ரேஷன் கடை அருகே டெண்ட் அமைத்து குடியிருப்பவர் கஜேந்திரன். இவரது மனைவி சுல்லி. இவர்களுக்கு, வெங்கடேசன்(14) பழனிவேல்(11) அஞ்சலட்சுமி(7) பழனிசாமி(6) சுமதி(4) என, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அஞ்சலட்சுமி மட்டும் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார். சிறுவர்கள் மூவரும் பிச்சை எடுக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: எங்கள் தந்தை குடை ரிப்பேர் செய்வார். ஜோசியம் பார்ப்பார். கிடைக்கும் பணத்தை அப்பாவும், மாமாவும் குடித்து செலவழிக்கின்றனர். இதனால், அம்மா எங்களை பிச்சை எடுக்க அனுப்புகிறார். தினமும், மூவரும் தலா 100 ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறோம். காலையில் சாப்பிட்டு வருவதோடு சரி. பிச்சை எடுக்கும் காசை கொடுத்த பின் தான், அம்மா எங்களுக்கு சாப்பாடு போடுவார். எங்களுக்கு பள்ளியில் சேர்ந்து படிக்க மிகவும் ஆசை. ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆசை. படிக்க உதவி செய்தால், பிச்சை எடுக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தொழிலாளர் நலத்துறை மூலம், இவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments: