Wednesday, October 21, 2009

தவறான உணவு பழக்கத்தால் இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மானத்தால் அவதி; அடுத்த 40 ஆண்டுகளில் 30 கோடி பேரை பாதிக்கும் அபாயம்


பீகார் மாநிலம் பாட்னாவில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் நேற்று எலும்பு தேய்மான விழிப்புணர்வு தினம் கடை பிடிக்கப்பட்டது. இவ்விழாவில் பிரபல எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அமுல்யா குமார் சிங் பேசும்போது கூறியதாவது:-

மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் எலும்பு தேய்மான (ஆஸ்ட்ரியோ போரசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது நம்நாட்டில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். அடுத்த 40 ஆண்டுகளில் 30 கோடி பேரை இந்நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இந்நோய் ஏற்படுவதற்கு கால்சிய குறைபாடுதான் காரணம். இந்நோய் ஏற்பட முக்கிய காரணம் தவறான உணவுப்பழக்கம்தான். மேலும் மது, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் இந்நோய் அதிக அளவில் தாக்குகிறது.

இந்நோய் பாதிப்பு உடையவர்களுக்கு தொடக்க அறி குறியாக மூட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரும்.

இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.

தற்போது நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் ரசாயனம் (கெமிக்கல்) அதிக அளவில் உள்ளதால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானத்திற்கான அறிகுறி இருப்பவர்கள் கால்சியம் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல விழிப்புணர்வு ........ஆம் இந்தியாவில் உணவு முறை சரி இல்லை