
புதுடில்லி : இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்களாக உள்ளனர்.
ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைய தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 15ம் தேதி "எம்.வி.கோட்டா வாஜர்' என்ற சிங்கப்பூர் கப்பல், செஷல்ஸ் தீவுக்கு அருகே சென்ற போது, சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் இரண்டு இந்தியர்கள், இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் உள்ளனர்.கப்பலையும், கப்பலில் இருக்கும் ஊழியர்களையும் மீட்க, கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் அரசின் உதவியை கோரியுள்ளது.
இந்த கப்பலில் உள்ள ரகுவீர் சிங் என்பவரின் மனைவி தீபிகா குறிப்பிடுகையில், "கப்பலில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால், எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை, எனவும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கப்பல் கடத்தப்பட்டது. இந்த தகவலை தெரிந்து நாங்கள் வற்புறுத்தியதன் பேரில் தான், கப்பல் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எங்களுக்கு பணம் தேவையில்லை. எங்கள் கணவர் விடுவிக்கப்படவேண்டும். கப்பல் நிறுவனத்துக்கு கப்பல் ஊழியர்களின் உயிர் பெரிதாக தெரியவில்லை' என்றார்.ஏடன் வளைகுடா பகுதியில், கடல் கொள்ளையை தடுக்க இந்திய கடற்படையும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் கடல்கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்க முடியவில்லை.
Source: http://www.dinamalar.com
No comments:
Post a Comment