
தண்டையார்பேட்டை, : பொதுமக்கள் பிடித்து கொடுத்த செல்போன் திருடனை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது தப்பி ஓடி விட்டார். தண்டையார்பேட்டை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் நாசர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரோஜாகனி (30). நேற்று முன்தினம் மாலை ரோஜாகனி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, ஒரு வாலிபர் வந்து, ‘’நான் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் பழைய செல்போனை கொடுத்தால், புது செல்போன் தருவேன். பணம் எதுவும் வேண்டாம்’’ என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய ரோஜாகனி, வீட்டிலிருந்த தனது செல்போனை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அந்த வாலிபர், குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டார். ரோஜாகனி தண்ணீர் எடுத்து வருவதற்குள் வாலிபர் செல்போனுடன் ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சி அடைந்த ரோஜாகனி ‘திருடன் திருடன்’ என அலறினார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அந்த வாலிபரை விரட்டினர். பொதுமக்களிடமிருந்து தப்பிப்பதற்காக, அவர் அருகிலிருந்த குளத்தில் குதித்தார். குளத்தில் அட்டைபூச்சி அதிகளவு இருந்ததால், பொதுமக்கள் யாரும் குளத்தில் குதிக்கவில்லை. உடனடியாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்திலிருந்து செல்போன் திருடனை வெளியில் கொண்டு வந்தனர்.விசாரணையில், அவர் புதுக்கோட் டையைச் சேர்ந்த உதயகுமார் (25) என்பது தெரியவந்தது. இவர் பல வீடுகளில் செல்போன் திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதற்கிடையே, குளத்தில் அட்டைபூச்சிகள் கடித்திருந்ததால் உதயகுமார் திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கிருந்து சிறிது நேரத்தில் உதயகுமார் தப்பிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.
Source : www.dinakaran.com
No comments:
Post a Comment