Wednesday, November 18, 2009

29_7_1979 ஞாயிற்றுக்கிழமை: தூத்துக்குடியில் சினிமா கொட்டகை எரிந்து 115 பேர் பலி!


தமிழ்நாட்டில் மிக பயங்கரமான தீ விபத்து தூத்துக்குடியில் நடந்தது. சினிமா கொட்டகை தீப்பிடித்து எரிந்து 115 பேர் பலியானார்கள். தூத்துக்குடி லூர்து அம்மாள்புரத்தில் கீற்றுக் கொட்டகையிலான "லட்சுமி டூரிங் டாக்கீஸ்" என்ற சினிமா கொட்டகை இருந்தது. அந்த சினிமா கொட்டகையில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, தேவிகா, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்த "பாவ மன்னிப்பு" சினிமாப்படம் திரையிடப்பட்டது.

29_7_1979 அன்று ஞாயிற்றுக்கிழமை. இதனால் அன்றைய தினம் சினிமாப்படம் பார்ப்பதற்காக அந்த தியேட்டரில் ஆண்களும், பெண்களும் கைக்குழந்தைகளுடன் திரளாக குழுமி இருந்தனர். கொட்டகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாட்னி காட்சி (பகல் காட்சி) 2 மணிக்கு தொடங்கியது.

மாலை 4 மணி அளவில் படம் நடந்து கொண்டிருந்தபோது, திரையில் தீப்பிடித்தது. இதைப் பார்த்ததும் ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடினார்கள். அந்த சமயத்தில் காற்று பலமாக வீசியதால் திரையில் பிடித்த தீ கொட்டகை முழுவதற்கும் பரவி கோபுரம் போல கொழுந்து விட்டு எரிந்தது.

கொட்டகைக்குள் சினிமா பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான பேர் சிக்கி தீயில் கருகினார்கள். சில பெண்கள் கைக்குழந்தையை கட்டிப்பிடித்தபடி கரிக்கட்டையாக கிடந்தார்கள்.

தீயணைப்பு படையினர் வருவதற்குள் தியேட்டர் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. சினிமா கொட்டகை இருந்த இடம் தரைமட்டமாகி விட்டது. பகல் காட்சி என்பதால் வெளிச்சம் புகாமல் இருப்பதற்காக இரு பக்கமும் சுற்றிலும் தார்பாய் போட்டு மூடி இருந்தார்கள்.

இதனால் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக தப்பி வெளியேற முடியாமல் திணறினார்கள். 5 நிமிட நேரத்திற்குள்ளாகவே கொட்டகையின் மேல் கூரை பகுதியில் மளமளவென்று தீப்பிடித்து கீழே விழுந்துவிட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 115 பேர் கருகி இறந்தார்கள். தீக்காயங்களுடன் 86 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பச்சிளம் குழந்தைகள் பலர் தீக்காயங்களுடன் வேதனையால் துடித்தபடி காட்சியளித்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்காக குவியல் குவியலாக வைக்கப்பட்டது. பலர் அடையாளம் காட்டி உடல்களை எடுத்துச்சென்றனர்.

தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். தூத்துக்குடிக்கு விரைந்தார். நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்று காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

ஒவ்வொரு படுக்கை அருகிலும் அவர் போய் நின்று விவரம் கேட்டார். பெண்கள் கதறி அழுதபடி தங்களுக்கு நேரிட்ட சோகத்தை சொன்னார்கள். அதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண் கலங்கினார். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். பலருக்கு நிதி உதவிகளை வழங்கினார்.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் உதவிப் பணம் வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சிகிச்சை பெறுபவர்களுக்கு கொசு வலை வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். உடனடியாக கொசு வலைகள் வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரின் குடும்பத்துக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவ பிரதமர் சரண்சிங் ரூ.1 லட்சம் வழங்கினார்.

நடிகர் சிவாஜிகணேசன் ரூ.25 ஆயிரம் கொடுத்தார். ரோட்டரி சங்கங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் நிதி வழங்கின. இந்த தீ விபத்து சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

பிரபல சர்க்கஸ் கம்பெனியான "வீனஸ் சர்க்கஸ்" குழுவினர், பெங்களூரில் சிட்டி ரெயில்வே நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் முகாமிட்டு காட்சிகள் நடத்திக் கொண்டிருந்தனர். 10_2_1981_ந்தேதியுடன் இந்த சர்க்கஸ் காட்சிகள் அங்கு நிறைவு பெறுவதாக இருந்தது. அதற்கு இரு தினங்களுக்கு முன்பு அதாவது 8_ந்தேதி மாலை பெரிய சோக சம்பவம் நிகழ்ந்தது.

மாலை 4 மணி காட்சி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் விடுமுறை நாள் ஆனதால் பள்ளிக்கூட மாணவ_மாணவிகள் திரளானபேர் சலுகை கட்டணத்தில் சர்க்கசை காண கூடி இருந்தனர்.

காட்சி முடியப்போகும் நேரத்தில் இரவு சுமார் 7 மணி அளவில் கூடாரத்தின் நடுப்பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது. அது மளமளவென்று கூடாரம் முழுவதும் பரவியது. மின்சாரமும் தடைபட்டது. கூடாரமும் விழுந்து மூடியது. இதனால் கூடாரத்துக்குள் சிக்கியவர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்கள். முதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் மறுநாள் இறந்தவர்கள் எண் ணிக்கை 66 பேர் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இறந்தவர்களில் 55 பேர் குழந்தைகள். மேலும் 4 ஆண்களும், 7 பெண்களும் பலியானார்கள். சுமார் 500 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்கள். இந்த தீ விபத்தில் சர்க்கஸ் கூடாரம் முழுவதும் எரிந்து சாம்பலானது. கூடாரம் இருந்த இடம் எலும்பு கூடு போல காட்சியளித்தது.இந்த தீ விபத்துக்கு 3 விதமான காரணம் கூறப்பட்டது. மின்சார கோளாறினால் தீப்பிடித்து இருக்கலாம். துண்டு சிகரெட்டை அணைக்காமல் போட்டதால் தீப் பிடித்ததாக சிலர் கூறினார்கள். ஆனால் வேறு சிலரோ கூடாரத்துக்குப் பின்னால் சமையல் செய்ததால் அதில் இருந்து கிளம்பிய தீப்பொறி விழுந்து தீப்பிடித்தது என்று கூறினார்கள்.பிரபல இந்தி நடிகர் சஞ்சய்கான் டெலிவிஷனுக்காக "திப்பு சுல்தான்" என்ற சரித்திர தொடரை தயாரித்தார். திப்பு சுல்தான் வாழ்ந்த மைசூரில் படப்பிடிப்பு நடத்த தீர்மானித்தனர். இதனால் அங்குள்ள பிரீமியர் சினிமா ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் தயாரிப்பாளரான சஞ்சய்கான் டைரக்டு செய்ததோடு அவரே திப்பு சுல்தானாகவும் நடித்தார். அவரது ஜோடியாக நடிகை நீனா குப்தா நடித்தார்.இந்த கதையில் வரும் திப்பு சுல்தானின் திருமண காட்சியை 8_2_1989 அன்று படமாக்க திட்டமிட்டனர். இதற்காக பிரமாண்ட அரங்கம் (செட்டிங்ஸ்) அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்புக்காக இரவு 10_30 மணி அளவில் நடிகர் _ நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்பட 150 பேர் அரங்கில் திரண்டிருந்தனர். திடீர் என்று பட்டாசு வெடிப்பது போன்ற பயங்கர சத்தத்துடன் தீப்பொறி பந்து போல பறந்து வந்து அரங்கத்தின் கூரையில் விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரங்கு முழுவதற்கும் தீ பரவியது. தீப்பிடிக்க தொடங்கியதும் மின்சார விளக்குகள் அணைந்தன. அரங்கின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அரங்கிற்குள் இருந்தவர்கள் தப்பி வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.இந்த பயங்கர தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி செத்தார்கள். 50_க்கும் மேற்பட்டவர் கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து மேலும் 28 பேர் இறந்தார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது.தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் நடிகர் சஞ்சய்கான் படப்பிடிப்பு குழுவினருடன் அரங்கத்துக்குள் இருந்தார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருடைய முதுகுப்பகுதி வெந்து விட்டது. கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பல மாதங்கள் சிகிச்சைக்குப்பிறகு அவர் குணம் அடைந்தார்.கதாநாயகி நீனா குப்தா படப்பிடிப்பு அரங்குக்கு சற்று தூரத்தில் `மேக்கப்' அறையில் இருந்ததால், காயம் இல்லாமல் தப்பினார். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மைசூரை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். துணை நடிகர்_நடிகைகளாக நடிப்பதற்காக அமர்த்தப்பட்டவர்கள்.

No comments: