
ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. செல்வத்தில் புரண்டு செருக்கோடு வாழ்ந்தவர், மர்லின் மன்றோ. அவருடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியே மன்றோவுக்கு இப்படி அமைந்திருந்தது.
ஆனால் இளம் பருவ வாழ்க்கையோ வறுமையும், சோதனைகளும் நிறைந்ததாக இருந்தது. மன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.
மர்லின் மன்றோ 1926_ம் ஆண்டு ஜுன் மாதம் 1_ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.
வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.
ஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.
எனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.
வாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக "போஸ்" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.
பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.
ஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.
மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.
மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.
3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என், இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.
கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment