
சென்னையில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கக்கூடிய இடமாக இருந்த மூர் மார்க்கெட், தீயில் எரிந்து சாம்பலாயிற்று. சென்னைக்கு வருகிறவர்கள் ஆவலோடு பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று "மூர் மார்க்கெட்." எந்த இடத்திலும் கிடைக்காத பொருள்கள் இங்கே இருக்கும்.
ரெடிமேடு துணிக்கடைகள், பொம்மைக் கடைகள், புத்தகக் கடைகள் என்று எல்லா வகையான கடைகளும் உண்டு. "வண்ண மீன்கள், கிளிகள், முயல்கள் போன்ற உயிரினங்களும் கிடைக்கும். "குண்டூசி முதல், யானை வரை மூர் மார்க்கெட்டில் வாங்கலாம்" என்று வேடிக்கையாகக் கூறுவார்கள்.
சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் சிவப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சி தந்த கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இருந்தது. இந்த மார்க்கெட் உருவானதற்கு ஒரு வரலாறுகூட உண்டு. அந்தக் காலத்தில் சென்னை "பிராட்வே"யில் ஒரு "மெயின் மார்க்கெட்" இருந்தது. அந்தப்பகுதி சாக்கடைகள் தேங்கி சுகாதார குறைவாக காணப்பட்டது.
அப்போது சென்னை நகரசபை (முனிசிபாலிடி) தலைவராக லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர் இருந்தார். அவர் சென்னை நகரத்தின் மேம்பாட்டிலும், சுகாதாரத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் "பிராட்வே"யில் உள்ள மெயின் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஜார்ஜ் மூர் திட்டமிட்டார். மூர் மார்க்கெட் இருந்த இடத்தில் அன்றைய தினம் "குஜ்லி பஜார்" இருந்தது. அந்த இடத்தில் மூர் மார்க்கெட் கட்ட ஜார்ஜ் மூர் அடிக்கல் நாட்டினார்.
1900 நவம்பரில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. 30_ந்தேதி அதனை கவர்னராக இருந்த ஆர்தர் கல்லாக் திறந்து வைத்தார். கடைகள் வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் ஓடின. சென்டிரல் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்துக்காக மூர் மார்க்கெட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதனால் சிவப்பு நிற முக்கிய கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இயங்கி வந்தது. மூர் மார்க்கெட் முழுவதையுமே வேறு இடத்துக்கு மாற்றிவிட அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் 29_5_1985 அன்று நள்ளிரவில் மூர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இடது புற கடை ஒன்றில் பிடித்த தீ கொஞ்ச நேரத்திற்குள் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. கட்டிடம் முழுவதும் கொழுந்து விட்டுஎரியும் போதுதான் தெரியவந்தது. 100 அடி உயரத்துக்கு தீ ஜுவாலை விட்டு எரிந்தது. தீயணைப்பு படையினர் 20 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து ராட்சத ஏணி கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.
அங்கு மொத்தம் 800 கடைகள் இருந்தன. இவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஓரிரு கடைகளே தப்பின. மற்ற அனைத்துக் கடைகளும் தீக்கிரையாகிவிட்டன.
கடைகள் எல்லாம் இடிந்த நிலையில் "மூர் மார்க்கெட்"டின் உள் பகுதியில் வியாபாரிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தனர். படையெடுப்பிற்குப் பிறகு அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது. மூர் மார்க்கெட் மிகப்பழமையான கட்டிடம். ஆதலால் கட்டிடத்தின் கிழக்குப்பகுதியில் செங்கல்களும், இரும்பு சட்டங்களும் இடிந்து விழுந்து விட்டன.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் ரூ.10 கோடி என்று மதிப்பிடப்பட்டது. எரிந்து போன கடைகளை அமைச்சர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, ப.உ.சண்முகம், திருநாவுக்கரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், என்.வி.என்.சோமு எம்.பி. ஆகியோர் சுற்றிப்பார்த்தார்கள்.
இந்த தீ விபத்துக்கான காரணம் பலவிதமாக கூறப்பட்டது. உண்மை என்ன? என்பது வெளி உலகுக்கு வராமலேயே மங்கிப்போனது.
No comments:
Post a Comment