Monday, November 23, 2009

சென்னை போலீசிடம் சிக்கிய நியூசி., வீரர்கள்



வெலிங்டன்: சென்னை வந்த நியூசிலாந்து வீரர்கள் நீல் புரூம், ஆரன் ரெட்மாண்ட் ஆகியோர் குடித்து விட்டு போதையில் சர்ச்சை கிளப்பிய விஷயம் தற்போது அம்பலமாகியுள்ளது. போலீஸ் விசாரணைக்கு பின், இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து "ஏ' அணியினர் சென்னை வந்தனர். இந்த அணியில் ஷேன் பாண்ட், கைல் மில்ஸ், புரூம், ரெட்மாண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
போதையில் சர்ச்சை:இதில் முன்னணி பேட்ஸ்மேன்களான புரூம், ரெட்மாண்ட் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஓட்டலை விட்டு ரகசியமாக வெளியேறியுள்ளனர். பின் இரவு விடுதிக்கு சென்ற இவர்கள் குடித்துள்ளனர். அருகில் இருந்த ஏ.டி.எம்., சென்று பணம் எடுத்துள்ளனர். போதை தலைக்கேற தெருவோரத்தில் தங்கியிருந்த ஏழைகளுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளனர். இதனை பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் திரள, பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார், இருவரையும் "ஸ்டேஷனுக்கு' அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் நியூசிலாந்து வீரர்கள் என்பது உறுதி செய்யப்பட, விடுவிக்கப்பட்டுள்ளனர். "டாக்சி' மூலம் ஓட்டலுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்தி நேற்று நியூசிலாந்து "மீடியாவில்' வெளியானது. இரு வீரர்களின் பெயர் குறிப்பிடப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவறுக்கு மன்னிப்பு:இதனை அறிந்த ரெட்மாண்ட், புரூம் தங்களது தவறை ஒத்துக் கொண்டனர். நியூசிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள 30 வயதான ரெட்மாண்ட் கூறுகையில்,""இவ்விஷயத்தில் மற்ற வீரர்களை சந்தேகப்பட வேண்டாம். நாங்கள் தான் ஓட்டலை விட்டு வெளியேறி இரவு விடுதிக்கு சென்றோம். தெருவோரத்தில் வாழும் மக்களுக்கு பணம் கொடுத்ததால் பெரும் கூட்டம் திரண்டது. இதனால் போலீசார் பிடியில் சிக்கும் நிலைமை உருவானது துரதிருஷ்டவசமானது. துவக்கத்தில் யார் என்று தெரியாததால் போலீஸ் "ஸ்டேஷனுக்கு' அழைத்துச் செல்லப்பட்டோம். பின்னர் ஓட்டலுக்கு திரும்ப "டாக்சி' ஏற்பாடு செய்து கொடுத்தனர். எங்களது முறையற்ற நடத்தைக்காக சக வீரர்கள், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,'' என்றார்.
இது குறித்து 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 26 வயதான புரூம் கூறுகையில்,""அணியின் விதிமுறையை மீறி செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் போர்டிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,''என்றார்.
இவர்களது தவறான நடத்தைக்காக நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும், தண்டனை தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்து விட்டது. இது பற்றி நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி ஜஸ்டின் வான் கூறுகையில்,""இவ்விஷயத்தில் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் உள்விவகாரம் என்பதால், எதையும் வெளியே சொல்ல முடியாது. எங்களை பொறுத்தவரை இது முடிந்து போன விஷயம்,''என்றார்.
குற்றம் இல்லை:இப்பிரச்னையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சம்பந்தப்பட்ட இரு வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் செயல் அதிகாரி ஹீத் மில்ஸ் கூறுகையில்,""வீரர்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை. இவர்கள் மீது புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஓட்டலை விட்டு வெளியேறி குடித்து விட்டு, சர்ச்சை ஏற்படுத்தியிருக்கக் கூடாது என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர்,''என்றார்.

No comments: