Wednesday, November 18, 2009

வரதட்சணை புகாரை ஆதாரமாக வைத்து கணவர் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது; மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்


வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவரது தாய்-தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்ய இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 ஏ போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும்தான் என்பதால் இந்த சட்டத்தை பயன்படுத்தி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில ஆண்டுகளாக இது போன்ற கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. சம்பந்தமே இல்லாத விஷயத்துக்காக பழி வாங்க துடிக்கும் மனைவிகள் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்துவதாக பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும்பத்தார் மற்றும் சமூக நல அமைப்புகள் மூலம் மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் அனுப்பப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வரதட்சணை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2007-ல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரதட்சணை வழக்குகள் பதிவாயின. இதில் 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணகாப்பக சர்வேயில் தெரிய வந்துள்ளது. பல வரதட்சணை வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிலரால் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்தது.

இதையடுத்து சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பிறகு மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே கணவர், அவரது குடும்பத்தினரை கைது செய்ய கூடாது. தீர விசாரித்து உயர் அதிகாரி திருப்திப்பட்டால் தவிர கைது நடவடிக்கையில் இறங்கக் கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்பவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

No comments: