Monday, November 23, 2009

உத்தரபிரதேசத்தில் பெண்கள் மட்டுமே வழிபடும் கோவில்


உத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்தாலி மாவட்டத்தில் சகல்திகா என்ற நகரம் உள்ளது. இங்கு ஸ்ரீபத் என்ற கோவில் இருக்கிறது. முந்தைய காலத்தில் வாழ்ந்த ஸ்ரீபத் என்ற முனிவருக்கு இங்கு கோவில் கட்டி உள்ளனர். 120 வருடத்துக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு பெண்கள் மட்டுமே சென்று வழிபாடு நடத்துகின்றனர். ஆண்கள் யாரும் கோவிலுக்கு செல்வது இல்லை. ஆண்கள் கோவிலுக்கு வரக்கூடாது என்று தடைகள் ஏதும் இல்லை. ஆனால் ஆண்கள் இந்த கோவிலில் வழிபட்டால் கெட்டதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே தான் ஆண்கள் யாரும் பயத்தினால் கோவிலுக்கு செல்வது இல்லை.

இதற்கு ஒரு கதையையும் சொல்கிறார்கள். முனிவர் ஸ்ரீபத்துக்கும் அந்த பகுதி மன்னர் சத்ரஷாவுக்கும் இடையே மோதல் இருந்ததாம்.

மன்னரும் அவருடைய மகன்கள் இருவரும் சேர்ந்து ஸ்ரீபத்தை சிறையில் அடைத்தனர். அங்கு ஸ்ரீபத் உண்ணாவிரதம் இருந்தார். அவரை யாரும் சந்தித்து உதவக் கூடாது என்று மன்னர் கட்டளையிட்டார்.

அதை மீறி மன்னருடைய 2 மகள்களும் முனிவரை சந்தித்து அவருக்கு தண்ணீரும் துளசியும் கொடுத்தனர். சிறிது நேரத்தில் முனிவர் உயிர் பிரிந்தது. அப்போது முனிவர் மகள்களுக்கு வெற்றியும், மகன்களுக்கு தோல்வியும் தருவேன் என்று கூறிவிட்டு உயிரைவிட்டார்.

இறந்து விட்ட சில நாட்கள் கழித்து மன்னர் தனது மகன்கள் மகள்களுடன் தேரில் சென்றனர். அப்போது தேர் விபத்தில் சிக்கி மன்னரும், 2 மகன்களும் செத்தனர். ஆனால் 2 மகள்களும் உயிர் பிழைத்தனர். முனிவரின் அருளால்தான் இது நடந்தது என்று மக்கள் நம்பினார்கள்.

இதில் இருந்து ஆண்கள் இந்த கோவிலுக்கு சென்றால் ஆபத்து என்று கருதி ஆண்கள் யாரும் கோவிலுக்கு செல்வது கிடையாது.

No comments: