Monday, November 9, 2009

கபில்தேவ் ஆட்டம் போல் இருந்தது: தெண்டுல்கருக்கு ஸ்ரீகாந்த் பாராட்டு


கிரிக்கெட்டின் சகாப்தம் என்பதை தெண்டுல்கர் ஐதராபாத்தில் நடந்த போட்டியில் நிரூபித்துவிட்டார். 36 வயதான அவர் 20 வயது இளைஞர் போல் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். ஓய்ந்து கிடந்த ஆட்டத்தக்கு புத்துயிர் கொடுத்தார்.

தனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு சார்ஜாவில் 1998-ம் அண்டு இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புயல் வேகத்தில் ஆடி இருந்தார். அதை விட ஐதராபாத் போட்டியில் 175 ரன் குவித்தது அவரது சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.

3 ரன்னில் தோற்றதால் இந்த சிறப்பான அட்டத்தை அவரால் மகிழ்ச்சி பொங்க கொண்டாட முடியவில்லை. தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்ததாக அவர் கூறி இருந்தார்.

தெண்டுல்கரின் சிறப்பான ஆட்டத்தை தேர்வு குழு தலைவரும், முன்னாள் கேப்டனுமான ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கரின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டத்தை பார்க்கும்போது எனக்கு 1983-ம் ஆண்டு உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் 175 ரன் குவித்ததுதான் நினைவுக்கு வந்தது. அந்த ஆட்டம் போல் இது இருந்தது. தோல்வியால் அவர் மட்டுமின்றி அணியே வேதனை அடைந்து இருக்கும். தெண்டுல்கரிடம் இருந்து இளம் வீரர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

351 ரன் இலக்கு என்பது சாதாரணமானது அல்ல. தனி ஒரு மனிதர் பொறுப்புடன் விளையாடியது . அவரது ஆட்ட நுணுக்கம் சிறப்பாக இருந்தது.

தெண்டுல்கரிடம் இருந்து நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம். அதை அவர் நிச்சயம் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

No comments: