Wednesday, January 20, 2010

அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கி சூடு வீட்டுக்குள் புகுந்து 8 பேர் சுட்டுக்கொலை; மர்ம மனிதன் “திடீர்” தாக்குதல்


அமெரிக்காவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் திடீரென வெறிப்பிடித்தது போல மக்களை நோக்கி சரமாரியாக சுட்டு கொல்வது வாடிக்கையான சம்பவமாக உள்ளது.

இன்று இதே போன்ற சம்பவம் ஒன்று அங்குள்ள வெர்ஜினியா நகரில் நடந்தது.

வெர்ஜினியா மாநிலம் ஒதுக்குபுறமாக உள்ள வீட்டுக்குள் ஒரு மர்ம மனிதன் நுழைந்தான். கையில் துப்பாக்கியுடன் சென்ற அவன் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 7 பேர் உயிர் இழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தான்.

துப்பாக்கி சூடு நடப்பது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் ஹெலிகாப்டரில் அந்த வீட்டுக்கு சென்று சுற்றி வளைத்தனர்.

ஹெலிகாப்டரை நோக்கியும் மர்ம மனிதன் சுட்டான். இதில் 4 குண்டுகள் ஹெலிகாப்டரில் பாய்ந்தது. ஒரு குண்டு ஹெலிகாப்டர் பெட்ரோல் டேங்கில் பட்டது.

எனவே ஹெலிகாப்டரை அவசரமாக அருகில் உள்ள மைதானத்தில் தரை இறக்கினார்கள். பின்னர் அதில் இருந்து இறங்கிய போலீசார் வீட்டை சுற்றி வளைத்தனர். அதற்குள் சாலை வழியாகவும் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.

இதனால் மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். போலீசார் அங்கும் புகுந்து தேடி வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து கிடந்த ஒருவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இத்துடன் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
மர்ம மனிதன் யார்? எதற்காக சுட்டான்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இறந்த 8 பேருமே இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள். மர்ம மனிதனும் அவர்களுக்கு அறிமுகமான வனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments: