
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென் மேற்கு ஹீஸ்டன் பகுதியில் ஹில்கிராப்ட் மாவட்டத்தில் தெற்குஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர்.
இவர்கள் இங்கு பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பலர் அலுவலக பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதியை “குட்டி இந்தியா” என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
எனவே டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக விடுத்து வந்த இவர்களது கோரிக்கை மகாத்மா காந்தியின் 141-வது பிறந்த ஆண்டான தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டுவதாக ஹ¨ஸ்டன் நகர மேயர் ஆன்னிஸ்பார்கர் அறிவித்தார். அப்போது இந்திய கவுன்சில் ஜெனரல் சஞ்ஜீவ்அரோரா உடன் இருந்தார்.
மகாத்மா காந்தியின் பெயர் சூட்டுவதற்கு ஹில்கிராப்ட் பகுதியில் வாழும் 75 சதவீத மக்கள் கையெழுத்திட்டு ஆதரவு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து நகரசபை சட்டப்படி மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதாக இந்திய கலாச்சார மையத்தின் செய்தி தொடர்பாளர் மனிஷா மேதா தெரிவித்துள்ளார். தற்போது இந்த மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment