Thursday, October 15, 2009

எடியூரப்பா நடத்திய மந்திரி சபை கூட்டத்துக்கு ரூ.1 கோடி ஆடம்பர செலவு



பெங்களூர், அக். 15-

கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா தனது முதல்-மந்திரி சபை கூட்டத்தை குல்பர்கா நகரில் நடத்தினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இந்த கூட்டம் நடந்தது. குல்பர்கா கர்நாடகாவில் வட பகுதியில் உள்ளது. வட பகுதி மக்களின் நம்பிக்கை பெறும் வகையிலும் அங்கு பாரதீய ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை காட்டும் வகையிலும் இந்த மந்திரி சபை கூட்டம் குல்பர்காவில் நடத்தப்பட்டது.

இதற்காக அப்போது ஆடம்பரமாக செலவு செய்யப்பட்டது. இதற்காக நகரம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது. 32 மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்கும் வகையில் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

மந்திரி சபை கூட்டம் சில மணி நேரம் தான் நடந்தது. இதற்கு இவ்வளவு ஆடம்பரமா? என்ற கேள்வி எழுந்தது.

அப்போது அரசு சார்பில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசுக்கு கேள்வி விடுக்கப்பட்டது. இதற்கு அரசு பதில் அளித்து உள்ளது.

அதில் மந்திரி சபை கூட்டத்துக்காக ரூ.92 லட்சத்து 39 ஆயிரம் செலவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அதில் மலர் அலங்காரத்துக்காக மட்டுமே ரூ.28 லட்சத்து 14 ஆயிரம் செலவு செய்துள்ளனர். சிவில் பணிகளுக்கு ரூ.41 லட்சத்து 30 ஆயிரமும் தங்கும் விடுதிகள் சீரமைப்புக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரமும், போக்குவரத்துக்கு ரூ.4 லட்சத்து 81 ஆயிரமும் உணவு மற்றும் தங்கும் செலவுக்காக ரூ.3 லட்சத்து 89 ஆயிரமும் செலவு செய்துள்ளனர்.

மந்திரி சபை கூட்டத்துக்கு ரூ.1 கோடி செலவு செய்த விவகாரம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1 comment:

ஊர்சுற்றி said...

can anybody tell me how much central government and State government spent while Ragul visited tamilnadu, Kerala?