
"ஷென்ஜோவ்-7' என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் இறங்கியுள்ளது.
இதில் சென்றுள்ள ஜியாய் ஜிகாங் என்ற வீரர் இன்று 40 நிமிடம்
விண்ணில் நடக்கிறார். சீனாவில் தயாரிக்கப்பட்ட விண்வெளி உடையை
அணிந்துசெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா,
ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைக்க
சீனா தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் அடைந்து
வருகிறது. 2003ம் ஆண்டு சீனா முதல்முறையாக விண்கலத்தை
அனுப்பியது.
வெற்றிகரமாக விண்ணில் : இதில் ஒருவர்
மட்டும் சென்றார். அடுத்ததாக 2005ம் ஆண்டு இரண்டு வீரர்களுடன்
விண்கலத்தை அனுப்பியது. இதற்கு அடுத்த கட்டமாக மூன்று விண்வெளி
வீரர்களுடன் "ஷென்ஜோவ்-7' என்ற விண்கலத்தை நேற்று முன்தினம்
சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஜியு குவான் ஏவுதளத்திலிருந்து
அனுப்பியது. இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் இறங்கியது.
இதில் போர் விமான விமானியான ஜியாய் ஜிகாங் தலைமையில் லியு
போமிங், ஜிங் ஹாய்பெங் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் ஷென்ஜோவ்
விண்கலத்தில் சென்றனர்
விண்வெளி திட்டத்தை வெற்றிகரமாக்க லட்சிய திட்டமிட்டது.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிப்புகளைப் பயன்படுத்தும்
வகையில் திட்டமிட்டது.மேலும், விண்வெளி சாதனை முயற்சியை விண்கலம்
புறப்படுவதில் இருந்து விண்வெளியில் சென்று இறங்கும் வரையும்,
பின் இன்று விண்வெளியில் வீரர் நடப்பதுவரை சீன மக்கள் "டிவி'யில்
நேரடியாகப் பார்க்கவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
சீன உடை: இன்று விண்வெளியில் 40 நிமிடம்
நடக்க இருக்கும் ஜியாய் ஜிகாங் அணிந்துள்ள விண்வெளி உடை, முழுக்க
முழுக்க சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உடைக்கு, "பறக்கும்
புத்த கடவுள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 44 லட்சம் டாலர் செலவில்
இந்த உடையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடையை
அணிந்துகொள்வதற்கே 15 மணி நேரம் ஆகுமாம். 15 அடுக்குகள் கொண்ட
இந்த உடையின் எடை மட்டும் 120 கிலோ.
உணவு: விண்வெளி வீரர்கள் எடுத்துச்சென்றுள்ள
உணவுகள் கூட சீன தயாரிப்புகள் தான். "செப்'கள் இதற்காக விசேஷ
கவனம் செய்துள்ளனர். இதில் ஊறுகாய், சாஸ் ஆகியவை இடம்
பெற்றுள்ளன. ஆனால், சோயால பால் முதலியவை விண்வெளி உணவாக
ஏற்கப்படுவதில்லை. புவியீர்ப்பு இல்லாத நிலையில் வாயு பதார்த்தம்
என்பது சரிப்படாது. விண்வெளியில் வீரர்கள் தங்கியிருக்கும் போது
குறைந்த அழுத்தம் காரணமாக உணவு சாப்பிட முடியாது. தவிரவும்
சென்றதடவை சிறு குழந்தைகளுக்கு மலஜலப் பிரச்னைகள் தவிர்க்க,
"டயபர்' அணிவிப்பது போல ஏற்பாடு இருந்தது. இத்தடவை, விண்வெளியில்
"டாய்லட்' வசதி விண்கலத்தில்
அமைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த இலக்கு:விண்வெளியில் நிரந்தரமாக
விண்வெளி நிலையம் அமைப்பது சீனாவின் அடுத்த திட்டம். இதற்கு
முன்னோடியாக சிறிய ஆய்வகம் ஒன்றை அமைக்கிறது.
தேர்வு எப்படி:விண்வெளிக்கு வீரர்களை
அனுப்புவதற்காக, 1998ம் ஆண்டு போர் விமான விமானிகள் 14 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் இருந்து இறுதியாக ஆறு பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. சாதாரண
வாழ்க்கை முறையில் இருந்து, விண்வெளிக்கு ஏற்றவகையில் இருக்க,
கடும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வெளியில் சாப்பிட
ஆசைப்பட்டாலும் முடியாது. பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்
உணவைத் தான் சாப்பிட வேண்டும்.
மேலும், தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வெளியுலக தொடர்பு
இன்றி பயிற்சி பெற்று வந்தனர். பயற்சிக் காலத்தில் இவர்களது
குடும்பத்தினரைச் சந்திப்பதே ஆபூர்வமாக இருந்தது. இருப்பினும்,
நேற்று முன்தினம் இவர்கள் விண்ணுக்குப் புறப்பட்ட போது இவர்களது
குடும்பத்தார், உறவினர்கள் மகிழ்ச்சிப் பொங்க வழியனுப்பி
வைத்தனர்.இன்று விண்வெளியில் நடப்பதன் மூலம், ஜியாய் ஜிகாங்
விண்வெளியில் நடந்த முதல் சீன வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
42 வயதான இவர், ஆங்கிலம் முதல் இயற்பியல் வரை மற்றும் வானியியல்
என 58 பாடங்களைப் படித்துள்ளார். விண்வெளியில் இருந்து
குடும்பத்தாருடன் உரையாடுவதற்காக தனியாக போன் இணைப்பும்
கொடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளிக்குச் சென்ற முதல் சீன வீரரான யாங் லிவி, கடந்தாண்டு
கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், "கம்யூனிஸ்ட் கட்சி
விண்வெளியில் விரைவில் கிளையைத் துவக்கும்' என்று
குறிப்பிட்டிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி ஒரு
கூட்டத்தைக் கூட்டுவது என்றால் மூன்று உறுப்பினர்கள் தேவை. அந்த
வகையில் இப்போது மூன்று வீரர்கள் விண்வெளிக்குச்
சென்றுள்ளனர்.சீன அரசு பத்திரிகையான "தி பீப்பிள்ஸ் டெய்லி'
நேற்று வெளியிட்டத் தலையங்கத்தில், "ஒலிம்பிக்கைத் தொடர்ந்து,
உலகத்தின் பார்வை மீண்டும் சீனா பக்கம் திரும்பியுள்ளது' எனக்
குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment