Showing posts with label சினிமா செய்தி. Show all posts
Showing posts with label சினிமா செய்தி. Show all posts

Monday, February 1, 2010

ஜூனியர் என்.டி.ஆருக்கு திடீர் திருமணம்: அதிர்ச்சியில் விஷம் குடித்த ரசிகை


நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த ரசிகை விஷம் குடித்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவருக்கு ஆந்திராவில் ஏராளமான ரசிகை பட்டாளம் உண்டு. இந் நிலையில் அவர் லட்சுமி பிரணதி என்ற பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த திருமண செய்தியை தெலுங்கு தனியார் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.

இதைப்பார்த்த கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர். ரசிகை அஞ்சனாதேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கடந்த சில மாதங்களாக தனது தோழிகளிடம் ஜூனியர் என்.டி.ஆர். போன்றவரைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தார். இதனால் அவரது கனவு தூள் தூளானது.

நீண்ட நேரம் கவலையில் மூழ்கிக்கிடந்த அவர் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யாருடன் நடக்கும் என்பது தெரியாது: `அம்மா-அப்பா அனுமதியுடன் என் திருமணம் நடக்கும்' நடிகை நயன்தாரா பரபரப்பு பேட்டி


நடிகை நயன்தாரா தினத்தந்தி நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நயன்தாரா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சமீபத்தில், `ஆதவன்' (தமிழ்), `பாடிகாட்' (மலையாளம்), `அதூஸ்' (தெலுங்கு) ஆகிய 3 மொழிகளிலும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படத்தில் நடித்து அந்த படம் ஓடவில்லை என்றால் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். படம் வெற்றிகரமாக ஓடினால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. 4 1/2 வருடங்கள் கழித்து `பாடிகாட்' என்ற மலையாள படத்தில் நடித்தேன். நல்ல கதை. அந்த படம் வெற்றி அடைந்தது. அதைபோல் `ஆதவன்' படமும் சிறந்த கதை அம்சம் உள்ள படம்.

நான் முதல் முதலாக விநாயக் டைரக்ஷனில் `லட்சுமி' என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதே விநாயக் இயக்கத்தில் மீண்டும் நடித்த `அதூஸ்` படமும் வெற்றி அடைந்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

கேள்வி:- அடுத்து ஒப்புக்கொண்டுள்ள புதிய படங்கள் பற்றி?

பதில்: இப்போது தமிழில் `பாஸ் என்ற பாஸ்கரன்' என்ற படத்தில் ஆரியாவுடன் ஜோடியாக நடித்து கொண்டு இருக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் ,மலையாளத்தில் ஷியாம் பிரசாத் இயக்கத்திலும், கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாகவும் நடித்து கொண்டு இருக்கிறேன்.

கேள்வி:- உங்களுக்கு கன்னடம் தெரியுமா?

பதில்:- நான் பெங்களூரில் பிறந்தவள் என்றாலும் கன்னடம் பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்வேன்.

கேள்வி:- திரையுலகில் உங்கள் லட்சியம் நிறைவேறி விட்டதா?

பதில்:- நான் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி திரையுலகத்திற்கு வந்தேன். பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் பெயரும், புகழும் பெற வேண்டும். பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் சினிமாவுக்கு வரும் போது எனக்கு எந்த வித ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்து விட்டு போய் விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வந்த பின் சினிமாவுடன் ஐக்கியமாகி விட்டேன். நான் எதிர்பார்த்திராத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்தது. சினிமாவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் படி எந்த லட்சியமும் இல்லை. நல்ல படங்கள் அமைய வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும். அது தான் என் ஆசை.

கேள்வி:- வாழ்க்கை எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?

பதில்:- நல்லபடியாக போய்க் கொண்டு இருக்கிறது.

கேள்வி:- மீனா, ரம்பா, நவ்யாநாயர் என உங்கள் சக நடிகைகள் திருமணம் செய்து கொண்டார்கள். உங்கள் திருமணம் எப்போது?

பதில்:- என் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா?

கேள்வி:- உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? பெற்றோர்கள் அனுமதியுடன் நடைபெறும் திருமணமாக இருக்குமா?

பதில்:- தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி. என் திருமணம் அம்மா-அப்பா அனுமதியுடன் தான் நடைபெறும். யாருடன் நடக்கும் என்பது தெரியாது.

கேள்வி:- பிரபுதேவாவுடன் உங்களை இணைத்து வரும் செய்திகளுக்கு, உங்கள் பதில் என்ன?

பதில்:- நோ கமெண்ட்ஸ் (பதில் சொல்ல விரும்பவில்லை).

கேள்வி:- சமீபகாலமாக மூக்குத்தி அணிந்து கொள்கிறீர்களே? என்ன விஷயம்?

பதில்:- மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அணிந்து கொண்டேன். வேறு ஏதுவும் இல்லை.

கேள்வி:- அடுத்து எந்த கதாநாயகனுடன் ஜோடி சேர ஆசைப்படுகிறீர்கள்?

பதில்:- இவரோடு தான் நடிக்க வேண்டும்... அவருடன் தான் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட மாட்டேன். யாருடன் நடித்தாலும் சந்தோஷம் தான். கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இன்னும் வரவில்லை, அப்படி வந்தால் நிச்சயமாக நடிப்பேன்.

கேள்வி:- வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன், நீங்கள் நடனம் ஆடப்போவதாக பேச்சு அடிப்படுகிறதே?

பதில்:- முதல்-அமைச்சருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வேன். ஆனால் நடனம் ஆடுவது பற்றி முடிவு செய்யவில்லை.

கேள்வி:- அடுத்த 20 வருடங்கள் கழித்து நயன்தாரா எப்படி இருப்பார்?

பதில்:- அது கடவுளுக்கு தான் தெரியும். அப்போது என்ன சூழ்நிலை? எப்படி இருப்பேன்? என்ன நடக்கும் என்று தெரிவதற்கு நான் கடவுள் அல்ல. சாதாரண மனுஷி.

கேள்வி:- உங்கள் அம்மா-அப்பா, அண்ணன் சந்தோஷமாக இருக்கிறார்களா?

பதில்:- எங்க அம்மா-அப்பாவை நான் சந்தோஷமாக வைத்து இருக்கிறேன். அண்ணன் துபாயில் இருக்கிறார். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை போனில் பேசிக்கொள்கிறோம். எந்த விஷயமாக இருந்தாலும் சரி அண்ணாவுடன் கலந்து பேசுகிறேன். நீ அப்படி இருக்க வேண்டும்... இப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா எனக்கு அறிவுரை சொல்வதில்லை. அதே போல் நானும் அவருக்கு அறிவுரை சொல்வதில்லை.

Thursday, January 28, 2010

“கோவா” படத்துக்கு தடை கோரி வழக்கு: “கடனை திருப்பித் தருகிறேன்; படத்துக்கு தடை விதிக்க வேண்டாம்” ரஜினி மகள் சவுந்தர்யா கோர்ட்டில் மனு


ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்த “கோவா” படம் நாளை (29-ந்தேதி) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தியாகராய நகரைச் சேர்ந்த கமலேஷ் கோத்தாரி என்பவர் சவுந்தர்யாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் “கோவா” படம் தயாரிக்க தன்னிடம் ரூ. 2 கோடி கடன் வாங்கியதாகவும்,அதற்கான ராயல்டி தொகை ரூ. 30 லட்சத்தையும் சேர்த்து படத்தை ரிலீஸ் செய்யும் முன் தந்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

பணத்தை திருப்பித் தராமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி இருந்தார்.

இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராமசுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சவுந்தர்யா தரப்பில் வக்கீல் ஹரிசங்கர் ஆஜராகி, கடன் தொகையை திருப்பித் தர தயாராக இருக்கிறோம். படத்துக்கு தடைவிதிக்க வேண்டாம். சிறிது கால அவகாசம் தரவேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று மாலை நடக்கிறது.

கரீனாகபூருக்கு பார்சலில் வந்த ரூ.5 லட்சம் நகைகள்: போலீசில் ஒப்படைத்தார்



இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கரீனாகபூர். ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ஐஸ்வர்யாராயை விட அதிக தொகை பெறுகிறார். கரீனாவும், இந்தி நடிகர் சயீப்அலிகானும் தீவிரமாக காதலிக்கிறார்கள். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது.

இந்தநிலையில் கரீனாகபூருக்கு தங்கம், வைர நகைகளுடன் மர்ம பார்சல் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள கரீனாகபூர் வீட்டு முகவரிக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. பார்சல் வந்தபோது கரீனாகபூர் வீட்டில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று இருந்தார். அவரது உதவியாளர் பார்சலை வாங்கி பிரித்தார். உள்ளே ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்றும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை ஒன்றும் இருந்தது. அதற்குள் ஒரு கடிதமும் வைக்கப்பட்டு இருந்தது.

அக்கடிதத்தில், நான் உங்கள் தீவிர ரசிகன். துபாயில் இருந்து இந்த நகைகளை வாங்கி அனுப்பியுள்ளேன். அடுத்த படத்தில் இந்த நகைகளை அணிந்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி உடனடியாக கரீனாகபூரை தொடர்பு கொண்டு உதவியாளர் தகவல் தெரிவித்தார். நகை பார்சலை போலீசில் ஒப்படைத்துவிடும்படி கரீனாகபூர் தெரிவித்தார்.
இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன. நகைகளை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Monday, January 25, 2010

சுடுகாட்டு நிலத்தை விற்றனர்: வடிவேலுவிடம் ரூ.7 கோடி மோசடி- துணை நடிகர்கள் கைவரிசை


சுடுகாட்டு நிலத்தை விற்றனர்: வடிவேலுவிடம் ரூ.7 கோடி மோசடி- துணை நடிகர்கள் கைவரிசை
திரையில் சிரிக்க வைக்கும் வடிவேலுவின் இன்னொரு புறம் சோகம் நிரம்பி கிடக்கிறது. கூட இருந்த நண்பர்களே ரூ.7 கோடியை மோசடி செய்து கம்பி நீட்டியுள்ளனர். இதை நினைத்து தினமும் அழுது கொண்டு இருக்கிறார்.

வருமான வரித்துறையினர் சமீபத்தில் வடிவேலு வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளியே தெரியவந்தது.

வடிவேலுவை சுற்றி எப்போதும் துணை காமெடி நடிகர் பட்டாளம் இருக்கும். அவர்களில் சிலர் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று புரியாமல் குழம்பினார். அப்போதுதான் கூட இருந்த சிலர் குழி பறிக்க வியூகம் வகுத்தனர். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுமாறு யோசனை சொன்னார்கள்.

நிலம் வாங்கி போட்டால் ஒரு வருடத்திலேயே விலை ஏறும் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்கள். அதை நம்பி வடிவேலுவும் நல்ல இடமாக பார்க்க சொன்னார். மோசடி நடிகர்கள் போலி தஸ்தாவேஜுகள் தயார் செய்து அரசு புறம்போக்கு நிலங்களை வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்தனர். உச்சகட்ட ஏமாற்றுத்தனமாக சுடுகாட்டுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தையும் வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்தனர்.

இதன் மூலம் நிலம் உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டுமென ரூ.7 கோடி வரை வாங்கியுள்ளனர்.

சில மாதங்கள் கழித்துதான் உண்மை தெரிந்தது. அதற்குள் ஏமாற்றியவர்கள் வடிவேலுவிடம் இருந்து கம்பி நீட்டிவிட்டனர். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்தே அழுதார். வருமான வரி அதிகாரிகளிடம் முதல் தடவையாக இதை தெரிவித்துள்ளார்.என் நண்பர்களை நான் பெரிதும் நம்பினேன். அவர்கள் தாம்பரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நிலம் வாங்கிதந்தனர். பிறகு விசாரித்தபோது அது போலி டாகுமென்ட் என தெரியவந்தது. பேப்பரை வைத்து ஏமாற்றி விட்டனர் என புலம்பியுள்ளார்.

இந்த விஷயங்கள் பற்றி வடிவேலுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உண் மைதான் என ஒப்புக்கொண்டார். துணை நடிகர்களான என் நண்பர்களை குருட்டுத்தனமாக நம்பினேன். அவர்கள் மோசம் செய்துவிட்டனர். அவர்கள் போலியாக வாங்கி தந்த நிலத்தில் ஒன்று சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். கஷ்டப்பட்டு சம்பா தித்த பணத்தில் பெருந் தொகையை இழந்து விட்டேன். ஒவ்வொரு வரையும் சிரிக்க வைக்கும் நான் திரைக்கு பின்னால் அழுது கொண்டு இருக்கிறேன். நெருக்கமான நண்பர்கள் துரோகம் செய்தால் அதில் ஏற்படும் வலி தாங்க முடியாததாக இருக்கும்.நிஜவாழ்வில் நான் ஒரு பப்பூன் என்று மற்றவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இதை வெளியில் சொல்லாமல் இருந்தேன் என்றார்.

வடிவேலு அதிக படிப்பறிவு இல்லாதவர் நிலம் வாங்குவதில் உள்ள சட்ட விஷயங்கள் பற்றி அவருக்கு அறவே தெரியாது. இதை சாதகமாக்கி ஏமாற்றி உள்ளனர்.

Wednesday, January 20, 2010

சினிமாவில் இருந்து அமிதாப்பச்சன் ஓய்வு பெறுகிறார்: அரசியலில் குதிக்க திட்டம்?



இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் 1969-ல் திரையுலகில் அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான பா படத்தில் சிறுவனாக நடித்து திரும்பி பார்க்க வைத்தார்.இதற்காக பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன. தற்போது நடித்த வரும் ராண் என்ற படம் ஜனவரி 29 அன்றும் “டீன் பட்டி” பிப்ரவரி 26-ந்தேதியும் ரிலீசாகின்றன. “ஷ¨பைட்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மும்பையில் சமீபத்தில் நடந்த சினிமா பட விழாவில் அமிதாப்பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் பேசிய அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. விரைவில் ஓய்வும் பெற போவதாக சூசக தகவல் வெளியிட்டார். எனது எல்லைக்கோடு முடிந்துவிட்டதாக உணர்கிறேன் என்றார்.

எனவே அமிதாப்பச்சன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக இந்தி பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.

ஏற்கனவே 1984-ல் ஒருமுறை சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் நுழைந்தார். அலகாபாத் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1988-ல் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

சினிமா தணிக்கை குழுவில் சிரஞ்சீவி மருமகனுக்கு பதவி; மகளை கடத்தி காதல் திருமணம் செய்தவர்


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கடந்த2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசிய திரு மணம் செய்து கொண்டார்.

ஸ்ரீரிஸ்பரத்வாஜ் என்பவருக்கும், ஸ்ரீஜாவுக்கும் 4 வருடமாக காதல் இருந்தது. ஒருநாள் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தை சிரஞ்சீவி ஏற்கவில்லை. இதனால் அவர் மூலம் தனது கணவருக்கு ஆபத்து வரலாம் என்றும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோர்ட்டுக்கு போனார். போலீசாரும் பாதுகாப்பு அளித்தனர்.

தற்போது ஸ்ரீஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தினரும் நெருங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரிஷ் பரத்வாஜுக்கு திரைப்பட தணிக்கை குழுவில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அக்குழுவில் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை அரசு அதிகாரிகள் வெளியிட்டனர்.

Wednesday, November 25, 2009

இந்தி நடிகை கைது: நடிகர் குணாலை கொன்றது எப்படி? போலீஸ் விசாரணை


நடிகர் குணால் கொலை வழக்கில் இந்தி நடிகை லவீனா பாட்டியா கைதாகியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்தது. குணால் “காதலர் தினம்”, “புன்னகை தேசம்” போன்ற தமிழ் படங்களில் நடித்தவர். அவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அப்போது அவ்வீட்டில் குணால் தோழியும் நடிகையுமான லவீனா பாட்டியா இருந்தார்.போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது குணால் எப்படி செத்தார் என்று எனக்கு தெரியாது என்றும் பாத்ரூம் போய் விட்டு திரும்பி வந்து பார்த்த போது தூக்கில் பிணமாக தொங்கினார் என்றும் கூறினார்.

இதையடுத்து குணால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்தனர். குணால் தந்தை இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு லவீனா கைதாகியுள்ளார்.லவீனா மீது சந்தேகம் உள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவரிடம் துருவி துருவி விசாரணை நடக்கிறது.

குணாலை லவீனாதான் கொன்றார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவரை கொன்றது ஏன்? என்று லவீனாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Thursday, November 12, 2009

விவாகரத்து கேட்டு மனு: நடிகை காயத்ரி ரகுராம் வழக்கு 23-ந் தேதிக்கு தள்ளி வைப்பு; கணவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு


பிரபல சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் சார்லி சாப்ளின், விசில் போன்ற படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ள தீபக் சந்திர சேகருக்கும், 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காயத்ரி கணவருடனேயே அமெரிக்காவில் தங்கினார்.

இவர்கள் குடும்ப வாழ்க்கையில் தற்போது திடீரென்று பிளவு ஏற்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், கணவரை பிரிந்து சென்னை வந்து விட்டார். குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தார். கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு முதன்மை குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கணவர் தீபக்சந்திரசேகர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையையும் வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

விவாகரத்து வழக்கு: பிரகாஷ்ராஜ், லலிதகுமாரி கோர்ட்டில் ஆஜர்; ஒருமனதாக பிரிவதாக புதிய மனு


தமிழ் திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். சொந்தமாக படங்களும் தயாரித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் பிசியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜுக்கும் பழைய கவர்ச்சி நடிகை டிஸ்கோசாந்தியின் தங்கை லலிதகுமாரிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரி குடும்ப நல கோர்ட்டில் லலிதகுமாரி மனுதாக்கல் செய்தார். பதிலுக்கு பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து பிரகாஷ்ராஜ் மாதம் தோறும் தனக்கு ரூ. 1 1/2லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று லலிதகுமாரி இன்னொரு மனுதாக்கல் செய்தார்.

குடும்ப நல கோர்ட்டின் சமரச மையத்தினர் இருவரையும் நேரில் அழைத்து இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தினர்.

இன்று இவ்வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி இருவரும் ஆஜரானார்கள். பிரகாஷ்ராஜ் தாக்கல் செய்த மனுவில் நானும், என் மனைவியும் ஒருமித்த கருத்தோடு பரஸ்பர உடன்பாட்டில் விவாகரத்து பெற விரும்புகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

வழக்கு விசாரணையை இன்று மாலைக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்பதால் விரைவில் விவகாரத்து கிடைக்கும் என்று தெரிகிறது. பின்னர் பிரகாஷ்ராஜும், லலிதகுமாரியும் ஒரே காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். மதிய உணவும் சாப்பிட்டனர்.

Source: http://www.maalaimalar.com

30 ஆண்டுகளாக தயாரானது 150 மணி நேரம் ஓடும் திரைப்படம்


பாரீஸ், : தொடர்ந்து 6 நாள், 6 மணி நேரம் ஓடக் கூடிய படம், 30 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. பாரீசில் விரைவில் இது திரையிடப்படுகிறது. லண்டனைச் சேர்ந்த இயக்குனர் ஜெரார்ட் கோரன்ட். இவர் 1978ம் ஆண்டு முதல் மிக நீண்ட படத்தை எடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக பிரபலங்கள், கலைஞர்கள், தத்துவ மேதைகள், பத்திரிகையாளர்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோருக்கு 3 நிமிடம் ஒதுக்கினார். அந்த 3 நிமிடங்களுக்குள் அவர்கள் எதையாவது செய்ய வேண்டும். அதை ஜெரார்ட் படமாக்கியுள்ளார். அந்தப் படம் இப்போது 150 மணி நேரம் (6 நாள், 6 மணி நேரம்) ஓடக்கூடிய அளவுக்கு உருவாகியுள்ளது. அதற்கு Ôசினிமா&டன்Õ என பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பட விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், மீடியா கருத்தரங்குகள் ஆகியவற்றில் கேமராவுடன் பங்கேற்ற ஜெரார்ட், அங்கு வரும் பிரபலங்களின் எண்ணங்களை படமாக்கியுள்ளார். இந்தப் படம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த மாத இறுதியில் திரையிடப்படுகிறது. உலகின் மிக நீளமான படம் என்ற சாதனையை Ôசினிமா&டன்Õ படைத்துள்ளது. இதுபற்றி ஜெரார்ட் கூறுகையில், ÔÔமுதலில் 100 பிரபலங்களின் கருத்தை புதிய கோணத்தில் படமாக்கி வெளியிட விரும்பினேன். அந்த திட்டம் வெற்றிகரமாக அமையவே, மேலும் பலருக்கு வாய்ப்பு தந்து, 150 மணி நேரம் ஓடக்கூடிய மிக நீண்ட படமாக மாற்றினேன்ÕÕ என்றார்.

கே.எஸ்.ரவிக்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம்


சென்னை : டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உட்பட 3 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி வளாகத்தில், வரும் 14ம் தேதி நடக்கிறது. பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை வகிக்கிறார். விழாவில் 2,287 மாணவர்களுக்கு பிஎச்.டி, எம்.டெக், எம்.பி.டி, பி.டெக், பி.டி.எஸ், பி.எஸ்சி, பி.பி.டி. ஆகிய பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் முனைவர் வி.கே.சரஸ்வத், கிரிக்கெட் வீரர் கபில்தேவ், திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் வி.என்.ராஜசேகரன் பிள்ளை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

Wednesday, November 11, 2009

நடிகை கேத்ரினாவுடன் எம்.எல்.ஏ. திருமணம் செய்ததாக போலி சான்றிதழ்: இந்தூரில் பரபரப்பு


இந்தூர்: பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலாவை திருமணம் செய்து கொண்டார் என்ற திருமண பதிவு சான்றிதழை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாநகராட்சி அங்கீரித்துள்ளது. கேத்ரினாவும் ரமேஷும் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக திருமண சான்றிதழில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் 11ல், இந்த சான்றிதழ் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி இந்தூர் மாநகராட்சி திருமண பதிவாளர் நட்வர் சர்தா கூறுகையில், ‘‘‘திருமண பத்திரம் முற்றிலும் போலியானது. இதை மாநகராட்சி அளிக்கவில்லை. கேத்ரினா & ரமேஷ் பற்றி பரபரப்பு ஏற்படுத்துவதற்காக இந்த போலி சான்றிதழை விஷமிகள் தயாரித்து உள்ளனர்’’ என்றார்.

Wednesday, November 4, 2009

பல லட்சம் செலவில் பத்திரப் பதிவு: சந்திர மண்டலத்தில் ஷாருக்கானுக்கு “பிளாட்” ஆஸ்திரேலிய ரசிகர் வாங்கி கொடுத்தார்



சந்திர மண்டலத்தில் எதிர் காலத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக இப்போதே சந்திரனில் பலர் இடம் வாங்கி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள லூனார் ரிபப்ளிக் சொசைட்டி இந்தி நடிகர் ஷாருக்கான் பெயரில் “பிளாட்” பத்திரப்பதிவு செய்து உள்ளது. அங்கு வசிக்கும் ஷாருக்கான் ரசிகர் ஒருவர் லூனார் ரிபப்ளிக் சொசைட்டியில் பல லட்சம் செலவில் இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த பத்திரத்தை ஷாருக்கானுக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்திரனில் ஒரு இடத்தை பதிவு செய்து பத்திரத்தை அந்த ரசிகர் ஷாருக்கானுக்கு அனுப்பி வைக்கிறாராம்.

அந்த பிளாட்டை என்ன செய்யப்போகிறீர்கள் என்று ஷாருக்கானிடம் நிருபர்கள் கேட்ட போது, எதிர் காலத்தில் எல்லோரும் அங்கு குடியேற வாய்ப்பு வந்தால் அப்போது அதுபற்றி யோசிப்பேன் என்றார்.

ஆசிய_ஆப்பிரிக்க பட விழா: சிவாஜிகணேசனுக்கு சிறந்த நடிகர் விருது "கட்டபொம்மன்" படத்துக்கும் பரிசு


ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது சிவாஜிகணேசனுக்கு வழங்கப்பட்டது. "வீரபாண்டிய கட்டபொம்மன்" _ இது, தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத படம். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மனைப் பற்றிய திரைக்காவியம்.

இந்த படத்தில் கட்டபொம்மன் வேடம் ஏற்று சிவாஜி கணேசன் நடித்தார். ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையை எதிர்த்து பேசும் அனல் தெரிக்கும் வசனங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் "உலக நாட்டியப் பேரொளி" என்று வர்ணிக்கப்பட்ட நடிகை பத்மினி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல டைரக்டரான பி.ஆர்.பந்துலு தயாரித்தார்.

1960_ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆசிய _ ஆப்பிரிக்க நாடுகளின் சினிமாப்பட விழா எகிப்து நாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள "வீரபாண்டிய கட்டபொம்மன்" சினிமா படத்தை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் இதுதான்.

இந்த படத்தில் நடித்த சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் சித்ரா கிருஷ்ணசாமி, படத்தை தயாரித்த பி.ஆர்.பந்துலு ஆகியோரை அனுப்பும்படி எகிப்து அரசாங்கம் கேட்டுக் கொண்டது. இதன்படி சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் கலைஞர்களை எகிப்து பட விழாவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

விழாவில் கலந்து கொண்ட சினிமாப்படங்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. நடிகர் _ நடிகைகளுக்கும் பரிசு தரப்பட்டது. பரிசுக்கு உரிய படத்தையும், நடிகர்களையும் நீதிபதிகள் தேர்ந்து எடுத்தார்கள். "சிறந்த நடிகர்" என்று சிவாஜி கணேசன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு கழுகு படம் பொறிக்கப்பட்ட "தங்கக் கேடயம்" பரிசு கொடுக்கப்பட்டது. எகிப்து நாட்டின் கலைத்துறை துணை மந்திரி இந்தப்பரிசை வழங்கினார்.

சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" என்ற படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்து எடுக்கப்பட்டார். சிறந்த ஆடல் _ பாடல் நிறைந்த படம் என்று "வீரபாண்டிய கட்டபொம்மன்" தேர்ந்து எடுக்கப்பட்டு, தனிப்பரிசு வழங்கப்பட்டது. "சிறந்த படம்" என்று "சாமர்க்கண்டு நாட்டு இளவரசன்" என்ற ரஷியப்படமும், சிறந்த செய்திப்படம் என்று "தாஜ்மகால்" என்ற படமும் தேர்ந்து எடுக்கப்பட்டன. அவற்றுக்கும் பரிசு தரப்பட்டது.

மத்திய அரசு தயாரித்த படம் "தாஜ்மகால்" என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசை பெற்றுக்கொண்ட பிறகு சிவாஜிகணேசன் எகிப்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பம்பாய்க்கு வந்தார். அவருடன் பி.ஆர்.பந்துலுவும் வந்தார். அதன் பிறகு அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

12_3_1960 அன்று இரவு சிவாஜி கணேசன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பட அதிபர்கள் வந்திருந்து அவரை வரவேற்றார்கள்.

சிவாஜிகணேசனுக்கு ஏராளமானபேர் மாலைகள் அணிவித்தார்கள். திரை உலகத்தினர் எல்லோரும் பாராட்டினார்கள்.

ஆசிய ஆப்பிரிக்க பட விழா எகிப்தில் நடந்தபோது, அதிபர் நாசர் சிரியா சென்றிருந்ததால், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிறகு நாசர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, சென்னை வந்தார். அப்போது நாசருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில், சிவாஜிகணேசன் வரவேற்பு இதழ் வாசித்தளித்தார். ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் பரிசு பெற்றதற்காக, சிவாஜிகணேசனுக்கு நாசர் பாராட்டு தெரிவித்தார்

Tuesday, November 3, 2009

அழகு நிலையத்தில் முகம் சிதைப்பு: ஷில்பாஷெட்டி மீது மாடல் அழகி வழக்கு; “ரூ.17 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும்”


இந்தி திரையுலகின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் “மிஸ்டர் ரோமியோ”, குஷி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

லண்டனில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று சக நடிகையின் நிறவெறி அவதூறுக்கு ஆளாகி உலகம் முழுவதும் பிரபலமானார். ஹாலிவுட் நடிகர் பொது மேடையில் முத்தமிட்டு ஷில்பாவை இன்னொரு சர்ச்சையில் சிக்கவைத்தார்.

தற்போது லண்டன் தொழில் அதிபருடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் இன்னொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். மும்பையில் ஷில்பாவுக்கு சொந்தமான அழகு நிலையம் உள்ளது. வசதியான பெண்கள், நடிகைகள் இந்த அழகு நிலையத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முக அழகு, கால், கைகள் அழகு, முடியழகு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அழகு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் அதிகமாக கட்டணத்தை ஷில்பாஷெட்டி வசூலிக்கிறார்.

இந்த அழகு நிலையத்துக்கு கவுரிகான் என்ற 22 வயது மாடல் அழகி வந்தார். தனது முகத்தை மேலும் வசீகரமாக்க சிகிச்சை அளிக்கும்படி வேண்டினார். அவருக்கு கடந்த சில மாதங்களாக முகத்தில் கிரீம் போட்டு தேய்த்தனர். வீட்டில் வைத்து போடவும் பவுடர், கிரீம், மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள். இதற்காக அவரிடம் 38 ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கப்பட்டதாம்.

ஆனால் ஷில்பாஷெட்டி அழகு நிலைய கிரீம்களை உபயோகித்த பிறகு கவுரிகான் முகம் திடீரென்று அலங்கோலமாகத் துவங்கியது. முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றின. தோல் பளபளப்பு மங்கியது. வயதான தோற்றத்துக்கு மாறினார்.

இதனால் அதிர்ச்சியான கவுரிகான் ஒஸ்வாரா போலீஸ் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மீது புகார் செய்தார். ரூ.17 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஷில்பாவுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

கவுரிகான் குற்றச்சாட்டுகளை ஷில்பா ஷெட்டி வக்கீல் மறுத்துள்ளார். சிகிச்சை காலத்தில் முகத்தை ஒழுங்காக பராமரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஷில்பா ஷெட்டி பொறுப்பாக முடியாது எனறு அவர் கூறியுள்ளார்.

Monday, October 26, 2009

22 ரூபாய் டிக்கெட்... 14 ஆண்டுகளாக ஒரே படம்... : மும்பையில் இப்படி ஒரு சாதனை


மும்பை : மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை "ஓட்டி'க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. "மராத்தா மந்திர்' என்ற தியேட்டரில், "தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள் தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். " இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம் தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத் தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத் தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டுதானிருக்கிறது.

Wednesday, October 21, 2009

சாதி இல்லே, சாமி இல்லே என்று வார்த்தைக்கு வார்த்தை முழங்கும் விவேக், இதுவரை பேசியதெல்லாம் சும்மா சினிமா வசனம்தானா?


படங்களில் ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விவேக், தனக்குப் பிரச்னை என்று வந்தவுடன் தனது ஜாதி முகமூடியை எடுத்து அணிந்துகொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடருகிறார்கள். எனக்குக் கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைக்கூடத் திரும்ப பெற சூழ்ச்சி நடக்கிறது. எனக்கு ஆதரவராக நீங்களும் களம் இறங்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். எங்கே தெரியுமா? அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுதான் இந்தப் புலம்பல்.

இது பற்றித் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சேதுராமன், தனிப்பட்ட முறையில் விவேக் மீது யாராவது வழக்குத் தொடர்ந்தால் மட்டும் இவருக்கு ஆதரவு கொடுப்பதென்றும் ஒட்டுமொத்த நடிகர்களோடு இவர் சேர்க்கப்பட்டால் அதை அவரே பார்த்துக்கொள்ளட்டும் என்றும் முடிவு செய்திருக்கிறாராம்.

சாதி இல்லே, சாமி இல்லே என்று வார்த்தைக்கு வார்த்தை முழங்கும் விவேக், இதுவரை பேசியதெல்லாம் சும்மா சினிமா வசனம்தானா? நல்லாயிருக்குப்பா நாடகம்..!

Monday, October 19, 2009

டி.வி. நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வம்: தியேட்டரில் சினிமா பார்க்கும் ரசனை குறைந்தது



தியேட்டர்களில் சினிமா பார்க்கும் ரசனை ரசிகர்களிடம் குறைகிறது. பண்டிகை காலங்களில் டி.வி. நிகழ்ச்சிகளில் முடங்கும் போக்கு அதிகரிக்கிறது.

தீபாவளிக்கு ஆதவன், பேராண்மை, ஜகன் மோகினி வெளிவந்தன. இப்படங்களை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த பல வருடங்களை ஒப்பிடும்போது பாதி அளவே கூட்டம் வந்திருந்தன. சனி, ஞாயிறு இரு தினங்களும் முன்பதிவு செய்யாமல் கவுண்டர்களிலேயே டிக்கெட்டுகள் கிடைத்தன.

பெரும்பாலனோர் தீபாவளியையொட்டி ஒளிபரப்பான டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்கவே ஆர்வம் காட்டினர். ஹிட் படங்கள், பட்டிமன்றம் நிகழ்ச்சிகள், நட்சத்திர பேட்டிகள் என டி.வி. சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தன. தியேட்டர்களுக்கு போவதை விட இதுவே அவர்களுக்கு உயர்வாக தெரிந்தது.

பெரிய நடிகர்கள் படங்கள் அதிகம் வராதது கூட்டம் குறைவுக்கு காரணம் என்கின்றனர். முந்தைய தீபாவளிகளில் முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும். ரசிகர்கள் போட்டி போட்டு தியேட்டர்களில் கட்- அவுட் வைத்து விழாக்கோலம் நடத்துவார்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம் போன்ற பிரபல நடிகர்கள் படங்கள் வராதது கூட்டத்தினர் வரத்தை குறைத்தது.

ரூ. 100, ரூ. 85 என்ற டிக்கெட் கட்டணங்கள், ரூ. 150 வரை வசூலிக்கப்படும். இரு சக்கர வாகன கட்டணங்கள் போன்றவைகளும் ரசிகர்கள் வரத்தை தடுத்தன. இதைவிட டெலிவிஷன்களில் நிறைய நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்ற ஆர்வமும் வீடுகளில் அவர்களை உட்கார வைத்தது.

இதுபற்றி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தியேட்டர்களில் கூட் டம் குறைந்திருப்பது நிஜம்தான். ஒரு காலத்தில் தீபாவளி என்றால் திரையரங்குகளில் கூட்டம் ஜே..... ஜே.... என்று இருக்கும். அது ஒரு பொற்காலம்.

முன்பெல்லாம் பெரிய நடிகர்கள் படங்கள் பண்டிகை காலங்களில் நிறைய வரும். இப்போது போட்டி வேண்டாம் என்று குறைத்துக் கொண்டனர். இதுவும் ஆரோக்கியமானதுதான். ஒரே நேரத்தில் படங்கள் வந்தால் லாபம் குறையும். தனித்தனியாக ரிலீசானால் அதிக தொகை ஈட்டலாம்.சேட்டிலைட் டி.வி.க்களின் வீச்சும் கூட்டத்தை குறைத்துள்ளது. ஒரே படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதும் கூட்டம் குறைவுக்கு காரணம். நிறைய தியேட்டர்களில் வெளியிடுவதால் 5 வாரத்தில் வசூலாகும் தொகையை ஓரிரு வாரத்தில் ஈட்டி விட முடியும். இது ஒரு வகையில் நல்ல விஷயமாக இருந்தாலும் இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கும் நிலைமை உள்ளது.

Monday, October 12, 2009

67-வது பிறந்த நாள்: “80 வயது வரை நடிப்பேன்” அமிதாப்பச்சன் பேட்டி


நடிகர் அமிதாப்பச்சன் நாளை தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த வயதிலும் அவர் பிசியான நடிகராக இருக்கிறார். அவர் நடித்த 3 படங்கள் ரிலீசாக காத்திருக்கிறது. டெலிவிஷன் நிகழ்ச்சி, விளம்பர நிகழ்ச்சி, பேஷன் ஷோ போன்றவற்றிலும் பங்கேற்று வருகிறார். அவர் சினிமா உலகுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. பிறந்தநாளை ஒட்டி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர்கள் வயதாகிவிட்டால் முக்கிய பாத்திரங்களில் நடிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அசோக்குமார் 80 வயதிலும் சிறப்பாக நடித்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றி நானும் 80 வயது வரை நடிப்பேன்.

ஆனால் இந்த வயதில் காதல் செய்யும் இளைஞராக நடிக்க முடியாது எனது 67 வயதுக்கு எந்த பாத்திரம் பொருத்தமாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து நடிப்பேன்.

எனது நண்பர் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் உடல் நலம் இல்லாமல் இருந்ததால் அவரை கவனித்து கொள்வதற்காக 3 மாதம் சிங்கப்பூரில் இருந்தேன். இன்னும் சில காலம் எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. வருகிற ஜூன் மாதத்துக்குள் என்னிடம் இருக்கும் அனைத்து படங்களையும் முடித்து கொடுத்து விடுவேன்.

மீண்டும் டெலிவிஷன் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது.