Tuesday, January 13, 2009

இரண்டு மாத குழந்தை வயிற்றில் இரட்டை சிசு கண்டுபிடிப்பு

லக்னோ: பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தை அடிவயிற்றில், இரட்டை சிசுக்களை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்; உடனே அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக அகற்றிஉள்ளனர். உ.பி.,மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலை., மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் உள்ள டாக்டர்கள் இந்த அபூர்வத்தை கண்டுபிடித்தனர். வயிற்று பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்த இரண்டு மாத குழந்தை வயிற்றில் இரட்டை சிசு இருப்பது, ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது. முதிர்ந்த இந்த கருக்கள், அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் நாராயணன் கங்கோபாத்யா தலைமையில் டாக்டர்கள் குழு, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களை அகற்றினர். அடிவயிற்றில், ஒரு சிறிய பையில் இந்த இரட்டை முதிர்கருக்கள் இருந்தன; இரண்டு சிசுக்களுக்கும் தலை, அதில் சில முடிகள் இருந்தன. அடிவயிற்றுப்பகுதி, விரல்கள் காணப்பட்டன; இரண்டும் ஆண் குழந்தைகள் என்று தெரியவந்தது. ஆனால், இரண்டுக்குள் இருதயம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்டு கருத்தரிக்கும் போது, அதில் ஒரு கரு மட்டும் வளர்ந்து குழந்தையாக பிறக்கும்; மற்ற இரு கருக்கள் தவறுதலாக அந்த குழந்தையின் உறுப்புகளில் சேர்ந்து விடுவது மருத்துவ உலகில் அரிதாக நடப்பது தான் என்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.
பல நாடுகளில் இதுவரை, 90 பேருக்கு இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கடந்த செப்டம்பர் மாதம் கோல் கட்டாவில் ஒரு மாத குழந்தை வயிற்றில் இருந்து ஒரு முதிர் சிசுவை டாக் டர்கள் அகற்றியுள்ளனர். இதற்கு முன், 1999ல், நாக்பூரில், 36 வயதான ஒரு ஆண் வயிற்றில் இருந்து கட்டி என்று நினைத்து, கருவை அகற்றியுள்ளனர். வாரணாசியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை, கடந்த நவம்பர் மாதம் பிறந்தது. அடிவயிற்றில் பாதிப்பு வந்ததும், அதை சோதித்தபோது தான் கருக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பித்த நீர்ப்பை போன்ற சிறிய பையில் இந்த இரட்டைக்கருக்கள் இருந் தது நிபுணர்களுக்கே வியப்பு. பிறந்து இரண்டே மாதம் ஆன குழந்தை வயிற்றில், இப்படி இரட்டை கருக்கள் இருந்தது இதுவே முதன் முறை என்று தெரிகிறது.

No comments: