ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் 60 வீடுகள் உள்ள ஒரு கிராமத்தில் 70 விதவைகள் உள்ளனர்.ராஜஸ்தானில் 20 லட்சம் பேர் சுரங்கங்களிலும், குவாரிகளிலும் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை இந்த சுரங்க தொழிலாளர்கள் சம்பாதிக்கின்றனர். ஆனால், சுரங்க தொழிலாளர்கள் அங்குள்ள தூசிகளினால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், "சிலிகாசிஸ்' என்ற நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர். குவாரிகளிலும், சுரங்கங்களிலும் காணப்படும் மணல் துகள்கள் நுரையீரலில் படிந்து இவர்கள் சுவாசிக்க சிரமப்பட்டு கடைசியில் இறந்து விடுகின்றனர்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை குவாரி உரிமையாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தி விடுகின்றனர். போதிய மருத்துவ வசதியில்லாமல், குவாரியில் வேலை பார்ப்பவர்கள் சிலிகாசிஸ் நோயால் இறந்து விடுகின்றனர். பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஜி கா கீடா என்ற கிராமத்தில் மொத்தம் 60 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் சுரங்க தொழிலாளர்கள் தான். இவர்கள் பெரும்பாலோர் சிலிகாசிஸ் நோயால் இறந்துவிட்டனர். தற்போது, இந்த கிராமத்தில் 70 விதவைகள் உள்ளனர். உயிரோடு இருப்பது 35 ஆண்கள் தான். இவர்களில், 10 பேர் சிலிகாசிஸ் நோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த மங்குகரோல் என்ற பெண்ணின் கணவர் இறந்ததும் பிழைப்புக்காக தனது மகன்களை குவாரிகளில் வேலைக்கு சேர்த்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருவர் பின் ஒருவராக நான்கு மகன்களும் இந்த நோயால் இறந்து விட்டனர். தற்போது, அரசு அளிக்கும் மாதம் 400 ரூபாய் விதவை பென்ஷனை வைத்து வாழ்ந்து வருகிறார். இந்த கிராமத்தில் தற்போது சுமங்கலி பெண்கள் யாரும் இல்லை.சிலிகாசிஸ் நோயிலிருந்து இந்த கிராமத்தை காப்பாற்ற இதுவரை ஆட்சி செய்த எந்த அரசும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, என்கின்றனர் இந்த கிராமத்தினர்.
Source: http://www.dinamalar.com
Monday, November 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment