
தனுஷ்கோடியிலும், ராமேசுவரத்திலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட போது அங்கிருந்த நடிகர் ஜெமினிகணேசனும், நடிகை சாவித்திரியும் அதிசயமாக உயிர் தப்பினார்கள். "பெரிய கண்டத்தில் இருந்து உயிர் பிழைத்தோம்" என்று அவர்கள் நிருபரிடம் கூறினார்கள்.
ராமேசுவரம் தீவில் கடுமையாக புயல் வீசியதால் தனுஷ்கோடியை கடல் விழுங்கியது. அந்த பகுதியில் கடல் நீர் புகுந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீராக காட்சி அளித்தது.
புயலின்போது ராமேசுவரத்தில் சிக்கிக்கொண்ட ஜெமினி கணேசனும், சாவித்திரியும் என்ன ஆனார்கள் என்பது, இரண்டு நாட்கள் தெரியாமலேயே இருந்தது.
சேதப்பகுதிகளைப் பார்வையிட மந்திரி கக்கன் பாம்பனில் இருந்து ரெயிலில் சென்றார். அவரை ஜெமினிகணேசன் சந்தித்தார். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் புயலில் இருந்து உயிர் தப்பிய தகவல் அப்போதுதான் தெரியவந்தது.
மந்திரி கக்கனுடன் அவர்கள் இருவரும் ரெயிலில் பாம்பன் திரும்பினார்கள். அதன்பிறகு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் 26_ந்தேதி இரவு சென்னை திரும்பினார்கள்.
"பெரிய கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தோம்" என்று இருவரும் தெரிவித்தனர்.
கட்டித்தழுவி வரவேற்பு
விமான நிலையத்தில் அவர்கள் இருவரையும் நடிகர்களும், சினிமா அதிபர்களும் வரவேற்றார்கள்.
ஜெமினிகணேசனைக் கண்டதும், அவருடைய நெருங்கிய நண்பரான நடிகர் பாலாஜி கட்டித் தழுவிக்கொண்டார். ஏ.பி. நாகராஜன், நடிகை சந்திரகாந்தா ஆகியோரும் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் பத்திரமாகத் திரும்பியது குறித்து மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
ஜெமினிகணேசன் விமான நிலையத்தில் இருந்து அவருடைய வீட்டுக்குச்சென்றார். அங்கு ஜெமினிகணேசனின் மனைவி பாப்ஜி ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றார்.
பேட்டி
ஜெமினிகணேசனையும், சாவித்திரியையும் நிருபர் பேட்டி கண்டார்.
"ராமேசுவரத்தில் இருந்து எப்படி தப்பித்து வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு, ஜெமினிகணேசன் கூறியதாவது:-
"நாங்கள் சென்னையில் இருந்து கிளம்பியபோது, ராமேசுவரம் போகவேண்டும் என்று நினைக்கவே இல்லை. கொடைக்கானலில் தங்கி இருக்கும்போது, "ராமேசுவரம் போய் வருவோமே" என்று சாவித்திரி தெரிவித்தாள். ஒரே நாளில் போய்விட்டு திரும்பிவிடுவோம் என்று முடிவு செய்து, ராமேசுவரம் போனோம்.
நான் சாவித்திரி, மகள் விஜயா, குடும்ப டாக்டர்கள் ராமகிருஷ்ணா, லீலாவதி, ஜெயம்மா ஆகிய 6 பேரும் 22_ந்தேதி காலை ராமேசுவரம் போய்ச் சேர்ந்தோம்.
ராமேசுவரத்தில் சாமி கும்பிட்டுவிட்டு தனுஷ்கோடி சென்றோம். அங்கு கடலில் குளித்தோம். குளித்ததும் ராமேசுவரத்துக்கு திரும்புவதற்கு தயாராகும்படி சாவித்திரியை துரிதப்படுத்தினேன். மேலும் ஒருநாள் இங்கேயே தங்கிவிட்டு, ராமேசுவரம் போகலாமே" என்று சாவித்திரி சொன்னாள்.
"வேண்டாம், இன்றே திரும்பி விடுவோம்" என்று நான் பிடிவாதமாகக்கூறி, எல்லோரையும் புறப்படச் செய்தேன். புறப்படுவதற்கு தயாராக நின்ற ரெயிலில் அவசரம் அவசரமாக ஏறி, பிற்பகல் 4 மணிக்கு ராமேசுவரம் போய்ச்சேர்ந்தோம்.
இரவு 8 மணிக்கு நான் படுத்து தூங்கிவிட்டேன்."
இவ்வாறு ஜெமினிகணேசன் கூறியதும், நடிகை சாவித்திரி குறுக்கிட்டு, "அதன் பிறகு நடந்ததை நான் கூறுகிறேன்" என்று கூறி பேட்டியைத் தொடர்ந்தார்:-
"இரவு 8 மணிக்கு புயல் அடிக்க ஆரம்பித்தது. "ஓ...!" என்ற சத்தத்துடன் காற்று சுழன்று சுழன்று அடித்தது. "காற்று இவ்வளவு பலமாக இருக்கிறதே, என்ன ஆகுமோ!" என்று நானும், டாக்டர்களும் கவலையோடு பேசிக்கொண்டோம்.
இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வரவர புயல் அதிகமாகியது. அவர் (ஜெமினிகணேசன்) விழித்துக்கொண்டார். நள்ளிரவு 3 மணி இருக்கும். நரிகள் கூட்டமாக சேர்ந்து ஊளையிட்டன. நள்ளிரவு நேரத்தில் பயங்கர சூறாவளியுடன், நரிகளின் ஊளை சத்தமும் சேர்ந்து, எங்களை நடுநடுங்கச் செய்தன. சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவம், வாழ்க்கையிலும் நடக்கிறதே என்று எண்ணினேன்.
இரவு 3 மணிக்கு புயல் உச்சகட்டத்தை அடைந்தது. 4 மணி வரையில் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு, பயங்கரப் புயல் வீசியது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள பிரயாணிகள் பங்களாவில் நாங்கள் தங்கி இருந்தோம். புயலில் அதன் கூரைகள் பறந்துவிட்டன.
ஒருவாறாகப் பொழுது விடிந்தது. நாங்கள் பங்களாவுக்கு வெளியே வந்தோம். எங்கும் ஒரே வெள்ளக்காடாக கிடந்தது. "என்னம்மா, ரோட்டில் ஆறு மாதிரி தண்ணீர் ஓடுது" என்று என் மகள் விஜயா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
நாங்கள் ராமேசுவரம் கோவிலுக்குப் போனோம். வழியெல்லாம் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. வீடுகள் இடிந்து கிடந்தன. கோவில் நிர்வாக அதிகாரியை நாங்கள் சந்தித்தோம். "இவ்வளவு பயங்கர புயல் வீசி இருக்கிறதே நாங்கள் திரும்பிச் செல்ல ரெயில் கிடைக்குமா?" என்று கேட்டோம். "ரெயிலா? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய்விட்டதே! தனுஷ்கோடி கடலில் மூழ்கி கிடக்கிறது. அங்கெல்லாம் பலத்த சேதம்" என்று அவர் சொன்னார்.
தன்னுடைய தம்பியும் கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று அவர் கூறி கண்ணீர் விட்டார். புயலின் முழு பயங்கரத்தையும் அப்போது உணர்ந்தோம்.
நாங்கள் 1,000 ரூபாய் கொண்டு போயிருந்தோம். அதை அங்கு வீடு வாசல் இழந்து தவித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். வீடுகள் இடிந்து விழுந்ததால், பலர் காயம் அடைந்து கிடந்தனர்.
அவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க என் வீட்டுக்காரர் உதவினார். அன்று முழுவதும் ராமேசுவரத்தில் தங்கி இருந்தோம்.
25_ந்தேதி காலை எழுந்ததும், எப்படி ஊர் திரும்புவது என்ற கவலை ஏற்பட்டது. ராமேசுவரத்தில் ஒரு ரெயில் என்ஜின் மட்டும் நின்று கொண்டு இருந்தது. அதில் ஒரே ஒரு பெட்டியை மட்டுமாவது சேர்த்து, எங்களை பாம்பனில் கொண்டு போய் விடும்படி நாங்கள் டிரைவரிடம் கேட்டுக்கொண்டோம்.
"ரெயிலை ஓட்டுவதற்கு நிலக்கரி இல்லை. நான் பாம்பன் போய் கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு அவர் பாம்பன் போனார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.
மாலை 4 மணிக்கு பாம்பனில் இருந்து ரெயில் வண்டி வந்தது. அதில் மந்திரி கக்கன் வந்தார். புயலில் வீடு வாசல் இழந்தவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்கள் கொடுத்தார்.
விமானத்தில் இருந்தும் சாப்பாடு பொட்டலங்கள் போட்டார்கள். அதை விஜயா ஆச்சரியத்தோடு பார்த்தாள். ஒவ்வொரு பொட்டலமும் கீழே விழும்போது ஒண்ணு, ரெண்டு என்று எண்ணினாள்.
26_ந்தேதி காலை 8 மணிக்கு மந்திரி கக்கன் வந்த ரெயிலில் ஏறி நாங்கள் பாம்பன் போய் சேர்ந்தோம். அங்கிருந்து மோட்டார் படகில் ஏறி மண்டபத்தை அடைந்தோம். மண்டபத்தில், எங்களுக்காக கார் காத்து இருந்தது. அதில் ஏறி மதுரை சென்றோம். மாலையில் விமானத்தில் ஏறி சென்னை வந்து சேர்ந்தோம்.
இவ்வாறு சாவித்திரி கூறினார்.
புயல் விழுங்கிய தனுஷ்கோடி சீரமைப்புக்காக நிதி திரட்டப்பட்டது. ஏராளமானவர்கள் நன்கொடை வழங்கினார்கள்.
புயலில் இருந்து உயிர் மீண்டு திரும்பிய ஜெமினிகணேசனும், சாவித்திரியும் செஞ்சிலுவை சங்கத்திடம் ரூ.10 ஆயிரம் வழங்கினார்கள். பிறகு காங்கிரஸ் தலைவர் காமராஜரை சந்தித்து மேலும் ரூ.5 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்கள்.
தனுஷ்கோடியை கடல் விழுங்கியது என்று கேள்விப்பட்டதும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் அதிர்ச்சி அடைந்தார். அவர் தனுஷ்கோடிக்கு சென்று அந்த பகுதிகளை சுற்றிப்பார்த்தார்.
பிறகு சென்னை திரும்பிய பெரியார் தான் கண்ட காட்சிகள் பற்றி கூறும்போது, "இதுபோன்ற கோர சம்பவத்தை என் வாழ்நாளில் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. என்றுமே மனதை விட்டு நீங்காத துயர சம்பவம் இது" என்று சொன்னார்.
தனுஷ்கோடியை புயல் தாக்கி பெரும் சேதம் விளைவித்தபோது, தமிழ்நாட்டில் முதல்_அமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். தனுஷ்கோடி கடலில் மூழ்கிய தகவல் அறிந்ததும் காமராஜர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சென்னை வந்தார்.
தனுஷ்கோடி பகுதியை பார்ப்பதற்காக காமராஜர் விமானப் படை விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அந்த விமானத்தில் முதல்_அமைச்சர் பக்தவச்சலம், தலைமை போலீஸ் அதிகாரி அருள் ஆகியோரும் சென்றார்கள்.
விமானம் திருச்சியை நெருங்கும்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இரண்டு இயந்திரங்களில் ஒன்றுதான் செயல்பட்டது. அந்த ஒரு இயந்திரத்தை வைத்தே சமாளித்து விமானத்தை இயக்கி திருச்சி விமான நிலையத்தில் இறக்கினார், விமானி. இந்த விவரம் பெங்களூருக்கு தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து வேறு விமானம் திருச்சிக்கு உடனடியாக வந்தது. பிறகு அந்த விமானத்தில் காமராஜரும், மற்றவர்களும் ஏறி தனுஷ்கோடிக்கு பயணமானார்கள்.
தனுஷ்கோடியில் தவிக்கும் மக்களுக்கு போடுவதற்காக விமானத்தில் 6 ஆயிரம் உணவு பொட்டலங்களும், ரொட்டி, பிஸ்கட்டுக்கள் போன்றவைகளும் ஏற்றிச் செல்லப்பட்டன. கடலில் மூழ்கிய தனுஷ்கோடி மீது விமானம் தாழ்வாக பறந்தது. சுமார் ஒரு மணி நேரம் விமானத்தில் பறந்தபடியே சேதங்களை காமராஜர் பார்வையிட்டார். விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உணவு பொட்டலங்கள் போடப்பட்டன.
பின்னர் சென்னை திரும்பிய காமராஜர் நிருபர்களிடம் கூறியதாவது:-"பாம்பன் பாலத்தில் வெறும் தூண்கள் மட்டும்தான் நிற்கின்றன. மக்கள் தனுஷ்கோடியில் இருந்து நடந்தே வெளியேறி வருகிறார்கள். எங்கள் விமானத்தை பார்த்ததும் கை அசைத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு பொட்டலங்களை போட்டோம்.
தனுஷ்கோடி மக்களுக்கு குடிநீர் கொடுப்பதுதான் பெரிய பிரச்சினை. வழக்கமாகவே தனுஷ்கோடிக்கு ரெயில் மூலம்தான் குடிதண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இனி எப்படி அனுப்புவது என்பதை யோசிக்கவேண்டும். பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து படகுகள் மூலம் தண்ணீரை அனுப்பலாம்."
இவ்வாறு காமராஜர் கூறினார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment