
மடத்துக்குளம் : இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் தன்னம்பிக்கை மட்டும் துணையாக 200 கி.மீ.,தூரம் மூன்று சக்கர சைக்கிளில் "எய்ட்ஸ்' விழிப்புணர்வு பிரசாரப் பயணம் செய்கிறார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, இட்டமளி பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (26); இரு கால்களும் ஊனமுற்றவர். தனது நண்பர் "எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் மனம் வேதனையடைந்தார். இதையடுத்து, "எய்ட்ஸ்' பாதிக்காமல் வாழ்க்கையை அமைப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
கால்கள் ஊனமான இவர், ஊனத்தை பொருட்படுத்தாமல், மூன்று சக்கர சசைக்களில் சென்று, பள்ளி,கல்லூரி மற்றும் பொது இடங்களில் எய்ட்ஸ் குறித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் இவர் பேரூராட்சி, நகராட்சி, கிராமங்களில் தங்கி பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த இவர் 11ம் வகுப்பில் "எய்ட்ஸ்' குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
அப்போது, நெல்சன் கூறியதாவது: பயணத்துக்கு அத்யாவசிமான உதவிகளை "தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை'யில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் வழங்குகிறார். தொடக்கத்தில் எங்கள் ஊரிலுள்ள தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளியில் 55 மாணவ மாணவிகளுக்கு ஆசிரியராக பணியாற்றினேன். "எய்ட்ஸ்' குறித்து பிரசாரம் செய்வதற்காக அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன். எட்டாவது முறையாக ஊர் ஊராக சென்று விழிப்பணர்வு பயணம் செய்கிறேன். மூன்று முறை எனது சொந்தப்பணத்தில் பயணம் செய்தேன். பிறகு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுதுறையின் அறிமுகமும் உதவியும் கிடைத்தது. தொடக்கத்தில் 18 நாட்கள் பயணம் செய்தேன். தற்போது, அக்.,21ல் திண்டுக்கல்லில் தொடங்கி, சென்னை வரை 200 நாட்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளேன். எச்.ஐ.வி., கிருமி தோன்றும் விதம் பரவும் முறைகள்,கிருமி தாக்காமல் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விளக்கமாக கூறி வருகிறேன். இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் சமுதாயத்துக்கு எனது கடமையை செய்துவரும் மன நிறைவில் எனது பணியை தொடர்கிறேன், என்றார்.
2 comments:
தொடரட்டும் அவரது சேவை...வாழ்த்துக்கள்.
ரோஸ்விக்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜோசப்
Post a Comment