Wednesday, November 11, 2009

பொருளாதார மந்த நிலை மாறியது வேலைக்கு ஆள் எடுப்பதில் ஐ.டி., கார் நிறுவனங்கள் தீவிரம்


புதுடெல்லி: பொருளாதார தேக்கநிலை மாறியுள்ளதால், நாடு முழுவதும் பல நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கத் தொடங்கியுள்ளன. மந்த நிலை காரணமாக வீட்டுக்கு அனுப்பிய ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தி வருகின்றன. உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலையால், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு பொருட்கள், சேவை அளித்து வரும் இந்திய நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஐ.டி., பீபிஓ, ஜவுளி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டன. சூப்பர் சம்பளம் வாங்கிவந்த ஐ.டி. ஊழியர்கள் வேலை இழந்ததால், கார் முதல் அதிக விலை கொண்ட செல்போன், எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையும் குறைந்தது. தற்போது உலகம் முழுவதுமே பொருளாதார தேக்கநிலை மாறி, வளர்ச்சி ஏற்பட்டு வருவதால், ஐ.டி., கார் உற்பத்தி, ஜவுளி நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுத்து வருகின்றன. கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி, போர்டு, ஹூண்டாய் ந¤றுவனங்கள் புதிய உற்பத்திப் பிரிவை அமைத்து வருகின்றன. மாருதி நிறுவனம் தனது கார் உற்பத்தியை ஆண்டுக்கு 10 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிதாக 400 இன்ஜினியர்கள், டெக்னீஷியன்களை வேலைக்கு அமர்த்துகிறது. சென்னையில் தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. தேக்க நிலை மாறி, விற்பனை சூடுபிடித்துள்ளதால், புதிய கார் அசெம்ளிங் பிரிவை தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை 1200 தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துள்ளது. சென்னையில் புதிதாக தொழிற்சாலையை அமைத்து வரும் நிஸான் நிறுவனத்தில் தற்போது 700 தொழிலாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை வரும் மே மாதத்துக்குள் 1500 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வேலைக்கு ஆள் எடுத்து வருகின்றன. சிஸ்கோ நிறுவனத்துக்கு இந்தியாவில் 3000 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளனர். அடுத்த 6 மாதத்துக்குள் புதிதாக 12 ஆயிரம் இன்ஜினியர்களை வேலைக்கு எடுக்க சிஸ்கோ திட்டமிட்டுள்ளது. அதேபோல், விப்ரோ நிறுவனம் மந்தநிலை காரணமாக, கடந்த ஆண்டு வீட்டுக்கு அனுப்பிய ஊழியர்களை கூப்பிட்டு, மீண்டும் வேலை கொடுத்து வருகிறது. செப்டம்பர் வரை 1000 பேரை புதிதாக நியமித்த விப்ரோ, அடுத்த மார்ச்சுக்குள் மேலும் 1000 பேரை வேலைக்கு சேர்க்கிறது. இதற்காக ஜனவரி மாதத்தில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் சவுதி அரேபியாவிலும் எகிப்திலும் 200 பேரை வேலைக்கு சேர்த்துள்ளது இந்நிறுவனம். இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் புதிதாக வேலை ஆர்டர்கள் கிடைத்துள்ளதே இதற்குக் காரணம். அவுட்சோர்ஸிங் பணியில் ஈடுபட்டுள்ள ஐகேட் நிறுவனம் 1500 ஊழியர்களை வேலைக்கு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்துக்கு அடுத்த ஆண்டில் செலவழிக்கும் தொகை 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக ஐகேட் தலைமை செயல் அதிகாரி பானேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்போசிஸ் பீபிஓவும் மார்ச் மாதத்துக்குள் புதிதாக 2000 பேரை நியமிக்க உள்ளது. அசெஞ்சர் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக 8000 பேரை வேலைக்கு எடுப்பதன் மூலம் ஊழியர்கள் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. காக்னிஸன்ட் நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை 8 ஆயிரம் பேரையும் டிசிஎஸ் 7,800 பேரையும் புதிதாக சேர்த்துள்ளது. டெலாய்ட் அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக 15 ஆயிரம் பேரை வேலைக்கு சேர்க்கப் போவதாக அந் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜிம் குயிக்லே தெரிவித்துள்ளார். ஸ்டான்சார்ட், எஸ்பிஐ வங்கிகளும் ஆயிரக் கணக்கில் ஊழியர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளன. ஸ்டான்சார்ட் 5000 பேரையும் எஸ்பிஐ 11 ஆயிரம் பேரையும் வேலைக்கு சேர்க்க உள்ளன. ÔÔசில்லரை விற்பனை, இன்சூரன்ஸ், தொழில் உற்பத்தி ஆகியவை பண முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன. இப்போது மந்தநிலை மாறியுள்ளது. இதனால் இத் துறை நிறுவனங்கள் கடந்த 3 மாதமாக புதிதாக வேலைக்கு ஆள் எடுத்து வருகின்றன. மேலை நாடுகளை சார்ந்திருந்த ஐ.டி., பீபிஓ துறைகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்படாத துறைகள் டெலிகாமும் எப்எம்ஜிசி எனப்படும் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் தயாரிப்புத் துறையும்தான்ÕÕ என்கிறார் அவ்தார் கேரியர் கேட்டரர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சவுந்தர்யா ராஜேஷ். கடந்த ஆண்டில் ஆட்குறைப்பு அதிகமாக இருந்தது. புதிதாக யாரும் ஆள் எடுக்கவில்லை. இப்போது நிலைமை மாறியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் 10 முதல் 15 சதவீதம்வரை ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன என்கிறார் மாஃபா நிறுவன நிர்வாக இயக்குநர் பாண்டியராஜன்.


No comments: