Thursday, January 28, 2010

சத்யம் ராமலிங்க ராஜுவை ஏழையாக அறிவித்தது கோர்ட்


நியூயார்க் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவை, பரம ஏழையாக அறிவித்ததோடு, அவர் கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குறித்து, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கடந் தாண்டு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மற்றும் இவரது சகோதரர் மீது அமெரிக்க கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், தாங்கள் பரம ஏழை என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் பரம ஏழை என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், தன் உத்தரவில் கூறியதாவது: ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர். அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பார்பரா ஜோன்ஸ் கூறினார்.

No comments: