Friday, February 5, 2010

குட்டி யானை இறந்த இடத்துக்கு தாய் யானை தொடர்ந்து வந்து கண்ணீர் விடும் உருக்கம்; வனப்பகுதிக்குள் யாரும்போக வேண்டாம் என எச்சரிக்கை


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப் பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் மேற்கு பகுதியில் யானைகள் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்து கொண்டு செல்கிறது. கடந்த 3-ந்தேதி இப்படி தண்ணீர் குடிக்க நிறைமாத பெண் யானை ஒன்று வந்தது. அந்த கர்ப்பிணி யானை தண்ணீர் குடித்து விட்டு கரையேறும்போது திடீரென்று அந்த யானை குட்டி ஆண் யானையை ஈன்றது.

உடனே தாய் பாசத்துடன் குட்டிக்கு அந்த பெண் யானை பால் கொடுக்க தட்டி எழுப்பியது. ஆனால் பிறந்த சில வினாடிகளில் அந்த குட்டி யானை தாய் கண் முன்னே இறந்து விட்டது.

இதைக்கண்டு அந்த தாய் யானை தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதது. அந்த யானையை சுற்றி மேலும் 3 யானைகளும் வந்து சோகத்துடன் நின்றது. அதன் பிறகு காட்டுக்குள் சென்றது.

பிறகு வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினர் அங்கு வந்து பார்வையிட்டனர். குட்டி யானை உடல் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைத்து விட்டு சென்றனர்.

நேற்று காலையிலும் மாலையிலும் குட்டி யானையை பறிகொடுத்த அதே இடத்திற்கு தாய் யானை வந்தது. குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தில் தாய் யானை மண்டியிட்டு துதிக்கையால் மண்ணை கிளறி கண்ணீர் விட்டு அழுதது. தனது உடலிலும் மண்ணை இறைத்து வீசி பிளிறியது. இந்த சத்தம் வனப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.

அந்த யானை மேலும் தொடர்ந்து வரக்கூடும் என்பதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக ஆடு... மாடு மேய்ப்பவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். குட்டியை பிரிந்த தாய் யானை மதம் பிடித்து சுற்றக்கூடும். ஆதலால் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

1 comment:

Unknown said...

//இதைக்கண்டு அந்த தாய் யானை தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதது.// விலங்காக இருந்தாலும் தாய் பாசம் மாறாது.. படிக்கும் நமக்கே கண்ணீர் வருகிறது