Tuesday, August 10, 2010

தூத்துக்குடி அருகே கோர விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி தீ பிடித்தது: 8 பேர் கருகி சாவு

தூத்துக்குடி அருகே கோர விபத்து:   நின்ற லாரி மீது கார் மோதி     தீ பிடித்தது: 8 பேர் கருகி சாவுதூத்துக்குடியில் இருந்து ஒரு லாரி ஜிப்சம் ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை சென்றது. லாரியை நெய்வேலியை சேர்ந்தகுமார் ஓட்டிச் சென்றார்.
 
கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது லாரியின் பின் பக்க டயர் பஞ்சர் ஆனது. அதனால் லாரியை டிரைவர் குமார் ரோட்டோரமாக நிறுத்திவிட்டு டயர்களை தட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரில் டிரைவர் உள்பட 8 பேர் இருந்தனர். கார் திடீரென ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.லாரியின் டீசல் டேங்க் மீது கார் மோதியதால், காரும் லாரியும் தீப்பற்றி எரிந்தது.
 
இதில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 8 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரியின் டிரைவரும், கிளீனரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
 
கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் லாரியும், காரும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டன.
 
காரில் இருந்த 8 பேரின் உடல்களையும் தீயணைப்புபடையினரும், போலீசாரும் மீட்டனர். உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலுமாக உருக்குலைந்து காணப்பட்டது.
 
இதனால் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விபரமும் உடனடியாக தெரியவில்லை.
 
கார் முற்றிலுமாக எரிந்துவிட்டதால் காரின் பதிவு எண், ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கார் யாருடையது என்பதையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

No comments: