Wednesday, August 11, 2010

அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை

அமெரிக்காவில் சமீபகாலமாக அன்னிய முதலீடு கணிசமாக குறைந்து வருவதாக அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். அயல்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாது என்ற அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதைப்பற்றியெல்லாம் அமெரிக்க அரசு கவலைப்படாது என்ற ஒபாமா, தொழில்நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து அரசின் பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்றார். டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒபாமா மேலும் பேசியது: தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதைவிட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும். இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இந்தத் திட்டம் நிச்சயம் அமெரிக்க மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமையும். அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப் பிரச்னையை எதிர்கொள்வதென்பது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனிமேல் அயல்பணி ஒப்படைக்கப்படாது. இதில் அரசு உறுதியாக உள்ளது. இது தவிர, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை நான் நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதுதான். இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் ஒபாமா.÷அட்லாண்டா மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் என கருதப்படுகிறது. இதனால் ஒபாமா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில், இனி அயல்பணி ஒப்படைக்கப்படாது என்று கூறி வருகிறார்.

No comments: