Friday, September 26, 2008

ஆழ்கடலில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரிலையன்ஸ் சாதனை

மும்பை: கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையை ஒட்டி அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் எரிவாயு எடுக்கும் பணியை அடுத்தாண்டின் முதல் காலாண்டில் துவக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்பாக, இப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் தேவைக்கு, இறக்குமதியை நம்பியிருப்பது குறையும் என்பதும், எரிபொருள் தேவைக்கு உள்நாட்டில் அபார உற்பத்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பெரும் சாதனையாகும்.இந்தியாவின் முதல் ஆழ்கடல் எண்ணெய் பகுதியான கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில், டி-6 பகுதியில் எண்ணெய் அகழ்வாராய்ச்சி பணியில் ரிலையன்ஸ் நிறுவனத் துக்கு அனுமதியளிக்கப்பட்டது. வரலாற்று சாதனை : இப்பகுதியில், 2006ம் ஆண்டு அகழ்வுப்பணியை மேற் கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம், கச்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்தது.இங்கு, 90 சதவீதம் இயற்கை எரிவாயுவும், 10 சதவீதம் கச்சா எண்ணெயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இயற்கை எரிவாயு எடுக்கும் பணி வரும் டிசம்பர் மாதம் துவங்குவதாக திட்டமிடப்பட்டது. தற்போது அந்த திட்டம் தாமதமாகி, அடுத்த காலாண்டில் துவங்கும் என தெரிகிறது.இதற்கு முன்பாக கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை வெற்றிகரமாக துவக்கி, ரிலையன்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆம். இந்தியாவின் முதல் ஆழ்கடல் எண்ணெய் கிணறான டி-6 பிளாக்கில் இருந்து கடந்த 17ம் தேதி முதல் கச்சா எண்ணெய் எடுக்க ரிலையன்ஸ் ஆரம்பித்துவிட்டது. துவக்கமாக நாள் ஒன்றுக்கு 5,500 பேரல்கள் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இத்தகவலை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முறைப்படி மும்பையில் அறிவித்தார்.அடுத்த ஒரு மாத காலத்தில் உற்பத்தி அளவு நாள் ஒன்றுக்கு, 20 ஆயிரம் பேரல்களாக (ஆண்டுக்கு 10 லட்சம் டன்) அதிகரிக்கப்படும். வரும் 2010ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேரல்களாக(20 லட்சம் டன்) உற்பத்தி அளவு அதிகரிக்கப்படும். தற்போது, டி-6 பிளாக்கிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் விசாகப்பட்டினத்திலுள்ள இந்துஸ்தான் பெட்ரோலியத்திற்கு விற்பனை செய்துள் ளது.கச்சா எண்ணெய் மிகுந்த தரத்துடன் இருப்பதால், அதை உள் நாட்டிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் வகையில் முழுவீச்சில் கச்சா எண்ணெய் உற்பத்தியானால் நாம் இறக்குமதியை நம்பியிருக்கும் அளவு குறைவதுடன் கோடிக்கணக்கில் பணம் மிச்சமாகும்.இயற்கை எரிவாயு எடுக்கும் பணி திட்டமிட்ட காலத்திற்கு மாறாக நான்கு மாதங்கள் கழித்து துவங்குகிறது. இங்கு கிடைக்க இருக்கும் எரிவாயுவால், வாகனங்களை இயக்க முடியும் என்பதால், நாட்டின் பல பகுதிகளுக்கும் குழாய் மூலம் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி வார்த்தையில்: சமையல் காஸ் விலை ரூ.116: கிருஷ்ணா - கோதாவரி பேசின் பகுதியில் ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு, முகேஷ் அம்பானி வார்த்தையில், "இந்தியாவுக்கும் ரிலையன்சுக்கும் அதிர்ஷ்டம்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய இரண்டும் கிடைக்கும் வகையில், நமக்கு வரம் இருக்கிறது. அதிலும், இயற்கை எரிவாயு 21ம் நூற்றாண்டின் எரிபொருள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.இயற்கை எரிவாயுவை அரசு நிர்ணயிக்கும் விலையில் ரிலையன்ஸ் விற்பனை செய்யும். மேலும், அரசுக்கு 85 ஆயிரம் கோடி வரை மிச்சமாக வாய்ப்பு இருக்கிறது. மற்ற நடைமுறைகள் ஒரு பக்கம் இருக்க இந்த மகிழ்ச்சி, பரபரப்பு ஏன் என்பதற்கு ரிலையன்ஸ் அளித்த விளக்கம்: டி-6 பிளாக்கிலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயு மூலம் 10 முதல் 12 கோடி வீடுகளுக்கு சப்ளை செய்ய முடியும். மேலும், ஐந்து கோடி இரண்டு சக்கர வாகனங்களுக்கும், 50 லட்சம் கார்களுக்கும் எரிபொருளைப் பயன்படுத்த முடியும். குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிடுவதன் மூலம், வீடுகளுக்கு நேரடியாக குழாய் இணைப்பு எரிவாயு சப்ளை செய்ய முடியும். இதனால், தற்போதுள்ள எல்.பி.ஜி., சிலிண்டர்களுக்கு விடை கொடுக்க முடியும். மேலும், தற்போது சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.304 முதல் ரூ.352 என விற்கப்படுகிறது. குழாய் மூலம் சப்ளை செய்யப்படும் போது சிலிண்டர் விலை ரூ.116 ஆக குறைய வாய்ப்பு இருக்கிறது.இதற்காக ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டுச் செல்ல ரிலையன்ஸ் திட்டமிட்டுள் ளது.

No comments: