
சென்னை : ""இந்த விஜயகாந்த் சொல்ல மாட்டான்; சொன்னால்
செய்வான்,'' என இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.சென்னை
ராயப்பேட்டையில், மத்திய சென்னை மாவட்ட தே.மு.தி.க., சார்பில்,
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்,
பேசியதாவது:அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தான்
இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்று தவறாக
யாரும் நினைத்து விடக்கூடாது. நான் ஏற்கனவே கானூர் கிராமத்தில்
தர்கா கட்டியுள்ளேன். இப்போதும், விஜயகாந்த் தர்கா என்று தான்
அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.சட்டசபை தேர்தலில் 18
முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தேன். வேறு எந்தக்
கட்சியிலும் இப்படி செய்யவில்லை.
நம்மிடம் ஒற்றுமை இருக்கிறது. பிரிவினை என்பது இல்லை. அதற்கு
இடம் கொடுத்து விடக்கூடாது. முஸ்லிம் சமுதாயத்தில் எல்லாரும்
நன்றாக படிக்க வேண்டும். அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும்.ஒரு
லட்சம் பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னேன். அது எப்படி
முடியும் என்று என்னை சிலர் கிண்டல் செய்தனர். இப்போது
சொல்கிறேன், இந்த விஜயகாந்த் சொல்ல மாட்டான்; சொன்னால் செய்வான்.
சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் பாதுகாக்க வேண்டும்.
பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு ஆதரவு தர
வேண்டும்.முஸ்லிம்கள் நோன்பு இருப்பது நல்ல விஷயம். தங்களது உடலை
வருத்திக்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை பெறுகின்றனர்.
இந்துக்கள் 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.
பழனி மலைக்கு செல்கின்றனர். தெய்வத்திற்கு பயந்து விரதம்
மேற்கொள்ளும் போது உடல் நலம் நன்றாக இருக்கும்.இவ்வாறு
விஜயகாந்த் பேசினார்.
"விஜயகான்': நோன்பு திறப்பு நிகழ்ச்சி
முடிந்ததும் விஜயகாந்துக்கு திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதி
இஸ்லாமியர் பேரவை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அப்பேரவையின் தலைவர் முகமது பேக் என்பவர் பேசுகையில்,
""விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர், கேப்டன் போன்ற பட்டங்கள்
உள்ளன. தற்போது அவருக்கு விஜயகான் என்ற பெயரை சூட்டுகிறோம்.
விஜய் என்றாலும் வெற்றி; கான் என்றாலும் வெற்றி என அர்த்தம்,''
என்றார்.
No comments:
Post a Comment