
ராமேஸ்வரம்: பணம் தேவையில்லை, மனம் இருந் தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்கிறார் உலக நாடுகளை நடந்தே சுற்றிவரும் ரஷ்யாவை சேர்ந்த செர்கே சிக்காசெவ்.ரஷ்யாவை சேர்ந்த செர்கே சிக்காசெவ்(40). எம்.பி.ஏ., படித்துவிட்டு உலக நாடுகளை நடந்தே சுற்றி வரவேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 13.8.2004 ல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தனது நடைபயணத்தை துவக்கினார். மங்கோலியா, சீனா, தாய் லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா வழியாக பாலைவனங்களையும், அடர்ந்த காடுகளையும் கடந்து வந்த செர்கே சிக்காசெவ் 5 மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தார். இந்தியாவில் பீகார், மத்தியபிரதேசம்,ராஜஸ்தான், டில்லி, அரியானா, உத்தரபிதேசம், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகத்திற்கு வந்தவர் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் வந்தார்.
சங்குமால் கடற்கரை பகுதிக்கு சென்ற செர்கே சிக்காசெவ்வை பணியில் இருந்த கடலோர காவல்படை போலீசார் விசாரித்து ஆவணங்களை பார்வையிட்டனர். இரவு முழுவதும் சங்குமால் கடற்கரையில் டென்ட் அடித்து தங்கிய செர்கே செக்கேசவ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு தொடர்ந்து இலங்கை சென்று அங்கி ருந்து ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதாக தெரிவித்தார். செர்கே சிக்காசெவ் கூறியதாவது: 10 ஆண்டுகளில் 62 நாடுகளை நடந்தே சுற்றி வர திட்டமிட்டு இப்பயணத்தை மாஸ்கோவில் இருந்து துவக்கினேன். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல கப்பல் மற்றும் விமானத்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்தேன்.
பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றை நேரில் பார்த்து அறியும் வாய்ப்பும், புதிய பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இந்த நடைபயணத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. நடைபயணத்தின் போது வழியில் சந்தித்த மக்கள் எனக்கு நிதி உதவியும், பல்வேறு தகவல்களையும் தந்து உதவினர். இந்த பயணம் எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும் நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார். தொடர் நடைபயணம் மேற்கொள்ளும் இவரை ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,கமலாபாய் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
No comments:
Post a Comment