
சென்னை: நவீன வசதிகள் கொண்ட "எம்.வி., எக்ஸ்புளோரர்' மிதவைப் பல்கலைக் கப்பல் 676 மாணவர்களுடன் நேற்று சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் உள்ள "வெர்ஜினியா' மிதவைப் பல்கலைக் கழகத்தில் அமெரிக்கா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 676 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களது படிப்பின் ஒரு பகுதியாக இம்மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டின் கலாசாரம், கல்வி, சரித்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். பிரேசில், பகாமாஸ், நமீபியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தியாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, "மிதவை பல்கலைக்' கப்பல் நேற்று காலை சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. சென்னையில் ஐந்து நாட்கள் தங்கும் இவர்கள் இந்தியாவில் சுற்றுப்புறச் சூழ்நிலை, மக்களின் கலாசாரம் ஆகியவற்றை அறிந்துக் கொண்டு, பழங்கால புராதனச் சின்னங்கள் பற்றியும் ஆய்வு செய்ய உள்ளனர். பல்கலைக் கழகத்தைப் போன்றே பல்வேறு வசதிகளுடன் "எம்.வி., எக்ஸ்புளோரர்' கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு மாடிகளைக் கொண்ட இக்கப்பலில் வகுப்பறைகள், ஓய்வறைகள், விளையாட்டுக் கூடம், நீச்சல் குளம் மற்றும் "லிப்ட்' என அனைத்து நவீன வசதிகள் உள்ளன. கம்ப்யூட்டர் லேப் வசதியும் உள்ளது. அன்றாட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் செயற்கோள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment