
சென்னை: ""அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது,'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, "சூப்பர் ஸ்டாராக' வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை, அவரது ரசிகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி: ரஜினியின் நண்பரான நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், "ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என்ற குரல், ரஜினி ரசிகர் களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும், வேண்டுகோள் விடுத் தும் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.கோவையில் ஒரு படி மேலாக ரஜினி பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிய ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி, உறுப்பினர் விண்ணப்பம் உள்ளிட்டவற்றையும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினர்.
இந்த மாதம் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது."எந்திரன்' படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்ததால், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. இதனால், எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்படைந்தனர். இரு நாட்களாக, ரஜினிக்குச்
சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கினர்.
ரசிகர்கள் உணர்வு குறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:
சமீப காலமாக ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டை மாநிலத்திலும், தமிழகத்திலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம், எனக்கு நன்றாகப் புரிகிறது.
அனுமதிக்க மாட்டேன்: தற்போது பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் "எந்திரன்' படப்பிடிப் பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள், அவரவர்களுக்கு விருப்பமுள்ள கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப் படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை, அந்தந்த மாவட்ட தலைவர்கள், தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, நான் நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். "அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசிலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று தெளிவாகக் கூறாமல் மீண்டும் குழப்பமான அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment