
பெங்களூரு: சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பல தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும், சாக்லேட் உள் ளிட்ட இனிப்பு பண்டங் களை இந்த ஆண்டு வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அந்த நாட்டை மட்டுமல்லாமல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல நிறுவனங்கள் குறிப்பாக விமான மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை ஒத்தி வைத்துள்ளன. பணவீக்க உயர்வு காரணமாக திணறி வரும் பல நிறுவனங்கள், சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பரிசாக இனிப்பு பண்டங்களை பரிசாக வழங்குவது வழக்கம். இந்தாண்டு அதை வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. பல நிறுவனங்கள் குறைந்த அளவு இனிப்பு பண்டங்களை கடைகளில் ஆர்டர் செய்துள்ளன. இதனால், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாமல், சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரியங்கா சிங்கானியா கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போதும், நிறுவனங்களால் மட்டும் 50 முதல் 80 சதவீதம் வரை சாக்லேட் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை. கடந்தாண்டில் அதிகமான சுவீட் வாங்கிய நிறுவனங்கள், இந்தாண்டு இதுவரை ஆர்டர் தரவில்லை' என்றார். பெங்களூரில் சாக்லேட் ஜங்ஷன் என்ற கடையை நடத்தும் அனுபாமா கூறுகையில், 'ஒரு நிறுவனம் எங்கள் கடையில் தீபாவளிக்காக 80 ஆயிரம் சுவீட் பாக்ஸ்கள் ஆர்டர் செய்திருந்தது. சில நாட்களில் அந்த ஆர்டரை 40 ஆயிரமாக குறைத்து விட்டது' என்றார்.
No comments:
Post a Comment