Sunday, October 19, 2008

ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கோடி இழப்பு

மும்பை: மிகப்பெரிய சரிவை கண்டு இருக்கும் இந்திய பங்குச்சந்தையில், முதலீட் டாளர்கள், புரோக்கர்கள், கதிகலங்கி போய் இருக்கின்றனர். சந்தையில் கோலோச்சிய முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை சிறப்பாக இருந்த பங்குச்சந்தைக்கு இந்தாண்டு போதாத காலம். ஜனவரியில் ஆரம்பித்த சரிவு, கடந்த வெள்ளிக்கிழமை பெரும்சரிவுடன் முடிந்துவிட்டது. 'சென்செக்ஸ்' ஐந்து இலக்கத்தில் இருந்து நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது. 'சென்செக்ஸ்' பத்தாயிரத்தில் இருந்து 21 ஆயிரம் புள்ளிகளை எட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளை எட்டியது. ஏறுவதற்கு மட்டும் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட சந்தை, 21 ஆயிரத்தில் இருந்து 9,000 புள்ளிகள் சரிவதற்கு மட்டும் பத்து மாதங்கள் எடுத்துக் கொண்டது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால், சந்தையில் கோலோச்சிய முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு நாளுக்குநாள் சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த 10ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 734 கோடியாக இருந்தது. இது 17ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் ரூ.10 லட்சத்து 44 ஆயிரத்து 245 கோடியாக குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் ரூ.94ஆயிரம் கோடியை இழந்துள்ளது. இந்த சரிவிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், மொத்த சந்தை மூலதனம் ரூ.4,000 கோடி அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வங்கித்துறை பங்குகள் ஏற்றம், இறக்கம் கண்டு இறுதியில் சரிவில் முடிந்தது. இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஏற்றம் கண்டு இருப்பதற்கு காரணம் வலுவான அடிப்படையை கொண்டு இருப்பதே காரணம். ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது, அதன் மொத்த பங்குகளை, அன்றைய அதன் விலையை கொண்டு பெருக்கினால் கிடைப்பது.
* சந்தையின் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் சந்தை மூலதனம் கடந்த வாரத்தில் மட்டும் 34 ஆயிரத்து 898 கோடி ரூபாய் சரிந்துள்ளது.
* பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை மூலதனம் 29ஆயிரத்து 933 கோடி ரூபாய் இழந்துள்ளது. கடந்த 17ம் தேதியன்று இதன் மொத்த சந்தை மூலதனம் 1,65,954 கோடியாக ரூபாயாக இருந்தது.
*தனியார் வங்கிகளில் முன்னணி வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சந்தை மூலதனம் முந்தையை வாரத்தை ஒப்பிடுகையில் 3,000 கோடி அதிகரித்து, 43 ஆயிரத்து 606 கோடியாகியுள்ளது.

No comments: