
சென்னை : நடந்தே உலகைச் சுற்றும் ரஷ்ய வாலிபர் நேற்று சென்னை
வந்தார். இந்தியாவில் இருந்து அடுத்ததாக இலங்கை செல்ல உள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த வாலிபர் செர்கே சிகாசேவ் (34). எம்.பி.ஏ., படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து ஒரே மாதிரியான வேலைகளை செய்வதில் விருப்பம் இல்லாத அவர், நடந்தே உலகைச் சுற்றி வர கிளம்பினார்.கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி ரஷ்யாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு நாடுகளை சுற்றிய பின் இந்தியா வந்துள்ளார்.
அவர் நேற்று சென்னை வந்தார்.செர்கே சிகாசேவ், நமது நிருபரிடம் கூறியதாவது:உலகில் உள்ள வெவ்வேறு கலாசாரம், நாகரிகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக பார்த்து தெரிந்துகொள்ளவும், அதைப் புத்தகமாக எழுதவும் நான் இந்தப் பயணத்தை துவக்கினேன். "வாழ்க்கையில் முடியாதது எதுவும் இல்லை' என்பதே எனது பயணத்தின் கொள்கை.
இதுவரை மங்கோலியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கிழக்கு தைமூர், புரூனே, ஆஸ்திரேலியா, திபெத், நேபாளம் ஆகிய நாடுகளைக் கடந்துள்ளேன். தற்போது இந்தியாவில் மும்பை, டில்லி உள்ளிட்ட பகுதிகளைப் பார்த்து வந்துள்ளேன்.அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருக்கிறேன். தினமும் 10 மணி நேரம் நடப்பேன். நெடுஞ்சாலையாக இருந்தால் சராசரியாக 40 கி.மீ., - மலைப்பகுதிகளில் - 15 கி.மீ., - அடர்ந்த காடுகளில் - 10 கி.மீ., என்ற விகிதத்தில் நடந்து வருகிறேன்.நான் செல்லும்
இடங்களில் எங்குமே ஓட்டல்களில் தங்குவதில்லை. உள்ளூர் மக்களின் உதவியுடன், அவர்கள் ஏற்பாடு செய்யும் இடங்களிலேயே தங்கி வருகிறேன்.
அவர்களது வாழ்க்கை முறையை நெருக்கமாக பார்த்து அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். எனது மனைவியும் ஒரு வயது மகனும் ரஷ்யாவில் உள்ளனர்.தென்துருவம், வடதுருவம், எவரெஸ்ட் மலைச் சிகரங்களுக்குச் சென்று வர வேண்டும் என்பது என் விருப்பம். இதுவரை ஐந்து லட்சம் கி.மீ., தூரம் நடந்துள்ளேன். நடப்பதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காலணி அணிந்துள்ளேன்.எளிதில் காற்று உட்புகுந்து வெளியேறும் வகையில் இந்த காலணி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது பயணம் 2010ம் ஆண்டு நிறைவடையும் என கருதுகிறேன்.
அப்போது 10 லட்சம் கி.மீ., தூரம் நடந்து முடித்திருப்பேன்.நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் இடையூறாக உள்ளனர். கிழக்கு மலேசியாவில் உள்ள காட்டுப் பகுதியில் 18 நாட்கள் இடைவிடாது நடந்து வந்தது உடல் சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.இவ்வாறு செர்கே சிகாசேவ் கூறினார்.
No comments:
Post a Comment