Wednesday, October 15, 2008

வருமானவரி வழக்கில் சிக்கினார் ஐஸ்வர்யா ராய் நெருக்கடி


மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் தாக்கல் செய்த, 1996-97ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில், அவர் சலுகை பெற்றதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உலக அழகிப் பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், கடந்த 1996-97ம் ஆண்டுக்கு தாக்கல் செய்திருந்த வருமான வரி கணக்கில், வரி கணக்கிடுவதற்கான ஆண்டு வருமானம், 2.14 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த ஆண்டில் தான் அவர் உலக அழகிப்பட்டம் பெற்றார். அதன்மூலம் அதிக பரிசுத் தொகை கிடைத்தது. உலக அழகிப் பட்டம் பெற்றதன் மூலம் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.



186 நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் இருந்ததால் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்ற பிரிவில் சலுகை பெற்றார்.கடந்த 2003ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஐஸ்வர்யா ராயின் வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்தனர். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில்
அவர் என்.ஆர்.ஐ., இல்லை என்பது தெரியவந்தது.வருமான வரித்துறையின் தனது வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்வதை எதிர்த்து ஐஸ்வர்யா ராய் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு
செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் கடந்தாண்டு வருமான வரித்துறையினர் முடிவுக்குத் தடை விதித்தது.இதை எதிர்த்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.


இம்மனுவை நீதிபதி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுமதித்தது.வருமான வரித்துறை சார்பில் ஆஜரான பென்னி சட்டர்ஜி வாதிடுகையில் கூறியதாவது:ஐஸ்வர்யா ராயின் வருமானம் குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை. ஆனால் அவர் என்.ஆர்.ஐ., பிரிவில் சலுகை பெற்றது தான், கேள்விக்குறியாகியுள்ளது. "மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்ற பிரிவில் தான் வருவதாகக் கூறி சலுகை பெற்றுள்ளார்.


அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது, அவர் 186 நாட்களுக்கு குறைவாகத் தான் அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்துள்ளார்.எனவே, அவர் உலக அழகிப் பட்டம் பெற்றதற்குப் பின் வெளிநாடுகளில் சம்பாதித்த 26 லட்ச ரூபாயிற்கு வருமான வரியை வட்டியுடன் செலுத்த உத்தரவிடவேண்டும்
இவ்வாறு பென்னி சட்டர்ஜி கூறினார்.

No comments: