
புதுடில்லி: டில்லியில் உள்ள குழந்தைகள் குண்டாக இருப்பதற்கும், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவதற்கும், அவர்கள் அடிக்கடி மதுபானம் அருந்துவதும், புகை பிடிப்பதுமே காரணம் என, அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (என்.ஐ.பி.சி.சி.டி.,), டில்லி குழந்தைகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு: டில்லி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 30 சதவீதம் பேரும், மாணவிகளில் 26 சதவீதம் பேரும் அடிக்கடி மதுபானம் அருந்துகின்றனர். இப்படி அடிக்கடி மதுபானம் அருந்தும் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குண்டாக இருப்பதோடு, உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குடிப்பதைப் பார்த்தே தங்களுக்கும் மது குடிக்கும் ஆர்வம் வந்ததாகவும் ஆய்வில் பங்கேற்ற குழந்தைகள் தெரிவித்துள்ளன. டில்லியில் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மது குடிக்க வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால், அதை யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. டில்லி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை, கடந்த ஆறு மாதத்தில் ஒரே முறை மதுபானம் அருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. மற்ற குழந்தைகள் எல்லாம் அடிக்கடி குடிப்பதாக தெரிவித்துள்ளன. மதுபானம் குடிப்பதோடு, "ஜங் புட்'களையும் சாப்பிடுவதால், அவர்களின் உடல் பருத்து விடுவதோடு, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் ஆட்படுகின்றனர்.
டில்லி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 16.5 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளன. அதிலும், அரசு பள்ளிகளில், படிக்கும் குழந்தைகளை விட, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளே அதிக அளவில் குண்டாக உள்ளன. மேலும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 3.6 சதவீதம் பேர் புகை பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே போல், இந்த வயது மாணவிகளில் 1.3 சதவீதம் பேர் அடிக்கடி புகை பிடிக்கின்றனர்.
"டில்லியில் மதுபானங்களும், போதைப் பொருட்களும், மாணவர்களுக்கு எளிதில் கிடைப்பதால், அவர்கள் இந்த வகை பழக்கத்திற்கு எளிதில் ஆட்படுகின்றனர். டில்லியில், சாலையோர கடைகளிலேயே போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. இளம் பருவத்தினர் சிகரெட்களையும், மதுபானங்களையும் எளிதில் பெறுகின்றனர்' என, குழந்தைகள் மேம்பாட் டுக்காக பணியாற்றி வரும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment