
ஈரோடு: ஈரோடு தனியார் மருத்துவமனையில், ஒரே நாளில், சோதனைக்குழாய் முறையில் கருவுற்ற 12 பெண்களுக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது. அவர்களுக்கு மொத்தம் 20 குழந்தைகள் பிறந்தன. ஈரோடு பெருந்துறை சாலையில், சுதா மருத்துவமனை அமைந்துள்ளது. குழந்தையில்லா தம்பதியருக்கு, "டெஸ்ட் டியூப்' முறையில் கருவூட்டப்பட்டு, குழந்தை உண்டாக்கப்படுகிறது. மருத்துவமனையில் குழந்தைக்காக சிகிச்சை பெற வந்த 12 தம்பதியருக்கு, பிப்., 15ம் தேதி, "டெஸ்ட் டியூப்' முறையில் குழந்தை உண்டாக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர் தனபாக்கியம் சிகிச்சை அளித்தார். கரு தரித்த 12 தாய்மார்களும், 38 வாரங்களாக மருத்துவரின் கவனிப்பில் இருந்தனர். சிகிச்சைக்கு வந்த 12 தம்பதியரும் தங்களுக்கு கந்தசஷ்டி அன்று குழந்தை பிறக்க வேண்டும் என டாக்டரிடம் வேண்டினர். அதன்படி நேற்று முன்தினம் 12 பேருக்கும் சிசேரியன் மூலம் பிரசவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, 12 பெண்களுக்கும் அடுத்தடுத்து ஆபரேஷன் செய்ததில், 14 ஆண் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை எடையுடன் ஆரோக்கியமாக உள்ளன.
நான்கு பெண்களுக்கு தலா ஒரு குழந்தையும், எட்டு பெண்களுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தன. சுதா மருத்துவமனை டாக்டர் தனபாக்கியம் கூறியதாவது: தற்போது, குழந்தை பெற்றுள்ளவர்களில் சிலர், திருமணம் முடிந்து பத்து முதல் 25 ஆண்டுகளான பிறகும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். கர்ப்பிணிகள் அனைவரையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தோம். நல்ல முறையில் குழந்தை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
1 comment:
Late news.But Interested for new reders
Post a Comment