Wednesday, November 26, 2008

தலை மட்டும் பெரிதாகும் குழந்தை


பெங்களூரு: பிறந்து ஏழு மாதமே ஆன குழந்தையின் தலை நாளுக்கு நாள் பெரிதாவதால் மருத்துவத் துறையினருக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. "குணப்படுத்த முடியாது' என்று டாக்டர்கள் பலரும் கை விரித்து விட்டனர். பெங்களூரு சிவாஜி நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இந்திரா நகர் தனியார் கம்பெனியில் ஆபீஸ் பாயாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி (22). இருவருக்கும் மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
விஜயலட்சுமி சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர். அவர்களுக்கு முதலில் ரித்திக் (2) என்ற மகன் பிறந்தான். அதையடுத்து ஏழு மாதம் முன் பெண் குழந்தை ஒன்று மருத்துவமனையில் பிறந்தது. பிறக்கும் போதே குழந்தையின் தலை பெரிதாக இருந்தது. "தலையில் நீர் வைத்துள்ளது, சிகிச்சை செய்தால் சரியாகும்' என்றும் டாக்டர்கள் கூறினர். பெண் குழந்தைக்கு ரூபா என்று பெயர் சூட்டினர். குழந்தையின் தலை மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அதனால் பெற்றோர் மிகுந்த மனவருத்தமடைந்தனர்.
பால், தண்ணீர் போல திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். திட உணவுகளை சாப்பிட முடியாது. தலைக்கு கீழே உள்ள பகுதிகள் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் அசைவற்று இருக்கிறது. பிறக்கும் போது 3.4 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தலை கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. தற்போது எட்டு கிலோ எடை கொண்டதாக உள்ளது. அதிர்ச்சியடைந்த ரூபாவின் பெற்றோர், பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்தனர்.
குழந்தை அருந்தும் பால், தண்ணீரில் 10 சதவீதம் மட்டுமே வயிற்றுக்குள் செல்கிறது. மீதம் உள்ள 90 சதவீதம், தலைக்குள் சென்று சேருவதால் தலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக தெரிவித்தனர். அதை ஆபரேஷன் மூலம் குணப்படுத்துவது மிகவும் கடினம். அப்படியும் ஆபரேஷன் செய்தால், உயிர் பிழைக்க 10 சதவீதம் மட்டுமே சாத்தியம் என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். குழந்தை ரூபாவின் கண்பார்வையும் நாளுக்கு நாள் தெரியாமல் போனது.
பெங்களூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கும், "குணப்படுத்த முடியாது' என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். ஆனாலும், மனம் தளறாத ரூபாவின் பெற்றோர், சென்னை பேபி மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி., ஆந்திராவில் உள்ள குப்பம் மருத்துவமனை, மும்பையிலுள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அனைத்து டாக்டர்களும், "குணப்படுத்த முடியாது' என்ற ஒரே பதிலையே கூறினர்.
தற்போது குழந்தையின் தலை, அதன் உருவத்தை விட பல மடங்கு பெரியதாக உள்ளது. குழந்தையை குணப்படுத்த ரூபாவின் பெற்றோர், ஏழ்மை நிலையிலும் லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டனர். தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். ரூபாவுக்கு என்ன நோய் என்பது குறித்து அவரை பரிசோதித்த டாக்டர் ராய் கூறுகையில், ""இந்த குழந்தைக்கு வந்துள்ளது "பிரைன் மேன்டல்' என்று பெயர். அதை குணப்படுத்துவது கடினம். குழந்தையால் திட உணவு சாப்பிட முடியாது. திரவ உணவு மட்டுமே சாப்பிட முடியும். அதுவும் 90 சதவீதம் தலைக்குள் சென்று விடுகிறது. 10 சதவீதம் மட்டுமே வயிற்றுக்குள் செல்கிறது.
""ஏற்கனவே தமிழகத்திலும், அசாம் மாநிலத்திலும் இதுபோன்ற குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தியுள்ளனர். இந்த குழந்தைக்கு உள்ள பிரச்னை, மற்ற இரு குழந்தையை காட்டிலும் வித்தியாசமானது. இக்குழந்தை மருத்துவ உலகிற்கே சவாலாக விளங்குகிறது. எத்தனை நாள் உயிர் வாழுமோ, அதுவரை தலை பெரிதாகிக் கொண்டே செல்லும்,'' என்றார்.


No comments: