
இந்தியா மற்றும் உலகளவில் தீவிரவாத தாக்குதல்களில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.பயங்கரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக்குவதும் தொடர்கதையாகிவருகிறது. இதற்குமுன் நடந்த சம்பவங்கள் தொகுப்பு இதோ...
1977- ஜப்பான் ரெட் ஆர்மி: ஜப்பானை சேர்ந்த "ஜப்பான் ரெட் ஆர்மி' எனப்படும் பயங்கரவாத அமைப்பு இந்திய மண்ணில் வான்வழிக் கடத்தலை கடந்த 1977 ம் ஆண்டு செப்., 28 ம் தேதி அரங்கேற்றியது. பாரிசிலிருந்து, டோக்கியோ ஹனேடா விமான நிலையத்துக்கு "டோக்லஸ்' டிசி-8 வகை விமானம் சென்றது. மும்பையில் தரையிறங்கிய இவ்விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர். மும்பையிலிருந்து இவ்விமானம் கிளம்பியவுடன், 5 பேர் கொண்ட "ஜப்பான் ரெட் ஆர்மி' குழு விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்கள் விமானத்தை வங்கதேசத் தலைநகர் தாகாவுக்கு செலுத்துமாறு கட்டளையிட்டனர். கடத்தப்பட்டவர்களை விடுவிக்க 30 கோடி ரூபாயும், சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தை சேர்ந்த 9 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசிடம் நிபந்தனை விதித்தனர். பயங்கரவாதிகளின் நிபந்தனையை ஜப்பானிய அரசு ஏற்றுக் கொண்டது. அதன் படி அக். 2 ம் தேதி பணத்தையும், 6 பயங்கரவாதிகளையும் தாகாவுக்கு அனுப்பி வைத்தது. உடனடியாக 118 பேரை பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர். அதன் பிறகு குவைத் விமான நிலையம் சென்று அங்கு 11 பயணிகளை விடுவித்தனர். மற்ற பயணிகள் அல்ஜீரியாவில் விடுதலை செய்யப்பட்டனர். 5 நாட்கள் நீடித்த இக்கடத்தலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
1995 - அல்-பரான்: காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காமில், 1995ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி, வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சிலரை, அல்-பரான் பயங்கரவாத அமைப்பு கடத்தியது. பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மன், நார்வே உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 6 பேர் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கினர். சிறையில் இருந்த மவுலானா மசூத் அசார் மற்றும் 20 பயங்கரவாதிகளை விடுதலை செய்தால் மட்டுமே, 6 பேரை விடுவிப்பதாக அல்-பரான் கோரிக்கை விடுத்தது. கடத்தப்பட்டவர்களை விடுவிக்க இந்திய அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்த பயனும் இல்லை. நார்வேயை சேர்ந்த ஆஸ்ட்ரோவின் சடலம், தலை வெட்டப்பட்ட நிலையில் 1995 ம் ஆண்டு ஆக., 13 ம் தேதி பகல்காம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்களை பற்றிய தகவல் கடைசி வரை கிடைக்கவில்லை.
1999- காந்தகார் விமான கடத்தல்: கடந்த 1999 ம் ஆண்டு டிச., 24 ம் தேதி நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டில்லி புறப்பட்ட ஐ.சி-814 என்ற விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர். இதில் 174 பயணிகள் இருந்தனர். இந்தியாவில் சிறையில் உள்ள பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு, நிபந்தனை விதித்தனர். அமிர்தசரசில் தரையிறக்கி விமானத்தில் எரிபொருள் நிரப்பித் தருமாறு பயங்கரவாதிகள் இந்திய அரசிடம் கேட்டனர். விமானத்தில் இருந்த 25 வயதான ரூபின் கத்யால் என்பவரை கத்தியால் குத்தினர். பின்னர் விமானத்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. லாகூர் சென்ற விமானம் அங்கிருந்து துபாய் சென்றது. துபாய் போகும் வழியில் பயங்கரவாதிகளால் குத்தப்பட்ட ரூபின் கத்யால் இறந்தார். துபாயில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். அங்கிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகாருக்கு விமானம் சென்றது. பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்ட இந்திய அரசு, மவுலானா மசூத் அசார், முஸ்டாக் அகமது சர்க்கார், அகமது உமர் சயீது ஆகிய மூன்று பேரை விடுதலை செய்தது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கான் அரசு உதவியுடன் பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். 8 நாட்கள் நடந்த இக்கடத்தலில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
2002 - அக்ஷர்தாம் கோயில் முற்றுகை: குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குள், பயங்கரவாதிகள் கடந்த 2002 ம் ஆண்டு செப். 25 ம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது கோயிலில் 600 பேர் வழிபாட்டுக்கு வந்திருந்தனர். உடனடியாக அங்கிருந்த ஒரு பெண்ணையும், கோயில் அலுவலர் ஒருவரையும் கொன்றனர். கோயிலுக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக பயங்கரவாதிகள் குண்டுகளை வீசினார். தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள், கோயிலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, அங்குள்ளவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடந்த இம்மோதலில் 29 பக்தர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 33 பேர் பலியானார்கள்.
"பிணை கைதிகள்' தொடரும் பயங்கரம்! : இதற்கு முன் வெளிநாடுகளில் ஏராளமான பயங்கரவாத பிணைக்கைதி சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
இவற்றில் முக்கிய சம்பவங்களின் தொகுப்பு:
1977 மே, நெதர்லாந்து: பள்ளியில் இருந்த 105 குழந்தைகளை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக்கினர். 20 நாட்களுக்குபின் குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டனர்.
1977 செப்டம்பர், மேற்கு ஜெர்மனி: மூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவை சேர்ந்த 9 பேரை "பிளாக் செப்டெம்பர்' என்ற பயங்கரவாத அமைப்பு கடத்தியது. இந்த சம்பவம் 21 மணி நேரம் நீடித்தது. இதில் இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவை சேர்ந்த 11 பேர் பலியானார்கள்.
1979 நவம்பர், ஈரான்: அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய ஈரான் புரட்சிக்குழுவை சேர்ந்த பயங்கரவாதிகள், 52 அமெரிக்க அதிகாரிகளை பிணைக்கைதிகளாக்கினர். 444 நாட்களுக்கு பின்னர் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
1980 பிப்ரவரி, கொலம்பியா: டொமினிக்கன் குடியரசு நாட்டின் தூதரகம் கொரில்லா படையினரால் கைப்பற்றப்பட்டது. 60 பேர் பிணைக்கைதிகளாகினர். 61 நாட்கள் இந்த கடத்தில் சம்பவம் நீடித்தது. பணத்தை பெற்றுக்கொண்டு, பிணைக்கைதிகளை விடுவித்தனர்.
1994 டிசம்பர், அல்ஜீரியா: ஏர் பிரான்ஸ்விமானத்தை கைப்பற்றிய பயங்கரவாதிகள் 232 பேரை பிணைக்கைதிகளாக்கினர். கடத்தல்காரர்களுடன் நடந்த மோதலில் 3 பயணிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நான்கு நாட்கள் நீடித்தது.
1996 ஜனவரி, கருங்கடல்: துருக்கியில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்ட கப்பல் கருங்கடல் பகுதியில் செசன்ய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. 232 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குபின் அனைவரும் மீட்கப்பட்டனர்.
1996 டிசம்பர், பெரு: லிமா நகரில் உள்ள ஜப்பானிய தூதரகத்தை துபாக் அமரு புரட்சிக்குழுவை சேர்ந்த 14 பேர் கைப்பற்றினர். நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டனர். 126 நாள் நீடித்த இந்த சம்பவத்தின் ராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
2002 அக்டோபர், ரஷ்யா: மாஸ்கோ நகரில் இருந்த ஒரு திரையரங்கை செசன்ய பயங்கரவாதிகள் கைப்பற்றினர். 850 பேரை பிணைக்கைதிகளாக்கினர். 129 பிணைக்கைதிகள் பலியானார்கள்.
2004 செப்டம்பர், ரஷ்யா: ஒரு பள்ளியில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் குழந்தைகள் உட்பட ஆயிரத்து 100 பேரை பிணைக்கைதிகளாக்கினர். 3 நாட்கள் நீடித்த இந்த சம்பவத்தில் 186 குழந்தைகள் உட்பட 334 பேர் கொல்லப்பட்டனர்.
2007 ஜூலை, ஆப்கானிஸ்தான்: தென் கொரியாவை சேர்ந்த 23 பேரை தலிபான்கள் பிணைக்கைதியாக்கினர். இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 42 நாட்கள் இந்த சம்பவம் நீடித்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் மற்ற பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
கருப்பு ஆண்டு - 2008: இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
நவ., 26, மும்பை: ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உட்பட ஏழு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி.
அக்., 30, அசாம்: மாநிலம் முழுவதும் 18 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 45 பேர் பலி.
அக்., 21, இம்பால்: மணிப்பூர் போலீஸ் கமாண்டோ காம்ப்ளெக்ஸ் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் 18 பேர் பலி.
அக்., 14, கான்பூர்: கலோனல்கஞ்ச் மார்க்கெட் பகுதியில் சைக்கிளில் வைககப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் 8 பேருக்கு காயம்.
செப்., 29, மாலேகான்: மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் 5 பேர் பலி.
செப்., 29, மொடாசா: மசூதி அருகில் மோட்டார்சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் ஒருவர் பலி.
செப்., 27, டில்லி: மெஹ்ரோலியில் மார்க்கெட் பகுதியில் குண்டுவீசப்பட்டதில் 3 பேர் பலி.
செப்., 13, டில்லி: நாடு முழுவதும் ஆறுஇடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 26 பேர் பலி.
ஜூலை 26, ஆமதாபாத்: இரண்டு மணிநேரத்துக்குள்ளாக அடுத்தடுத்து நடந்த 20 குண்டுவெடிப்புகளில் 57 பேர் பலி.
ஜூலை 25, பெங்களூரு: சக்திகுறைந்த குண்டுவெடித்ததில் ஒருவர் பலி.
மே 13, ஜெய்ப்பூர்: தொடர் குண்டுவெடிப்பில் 68 பேர் பலி.
மீண்டும் மும்பையில் சோகம்: கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மட்டும் நான்கு முறை கடுமையான பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது.
2008 நவ. 26: வெளிநாட்டினர் தங்கும் ஓட்டல்கள் உட்பட ஏழு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2006 ஜூலை 11: மும்பையில் புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 200க்கும் மேற்பட்டோர் பலியானர்கள்.
2003 ஆக. 25: மும்பையில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
1993 மார்ச் 12: ஸ்டாக் எக்சேஞ்ச், ஓட்டல்கள், ஏர் இந்தியா அலுவலகம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடந்த தொடர்குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள்.
No comments:
Post a Comment