Tuesday, December 30, 2008

வாழ்க்கை வாழ்வதற்கே... கருப்பாக இருப்பதை நினைத்து கவலைப்படும் பெண்ணா நீங்கள்...



பொதுவாக, பெண்கள் அனைவருமே, அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள நினைப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான். நிறம் மற்றும் உடல் வடிவமைப்புக்கு, பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான விஷயம். காரணம், எதிர் பாலினத்தை ஈர்ப்பதில், இவை இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது தான். நமது நிறத்தை தேர்ந்தெடுப்பது நமது கைகளில் இல்லை.

அதுபோல, நம் நிறத்தை மாற்ற முடியாது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. என்றாலும், கருப்பாக இருக்கும் பெண்கள் பலருக்கு, நாம் இப்படி கருப்பாக இருக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மை இருப்பது மறுக்க முடியாத உண்மை..
நன்கு படித்த, பெரிய பதவிகளில் இருக்கும் பெண்கள் கூட, தாங்கள் கருப்பாக இருப் பது பற்றி கவலை அடைவதுதான் வேதனைக்குரிய ஒன்று. இதற்கு காரணம் என்ன? வெள்ளையாக இருக்கிறவர்கள் எல்லாம் மேதைகளாகவும், அழகுள்ளவர்களாகவும், கறுப்பாக இருக்கிறவர்கள் படிக்காதவர்களாகவும் அழகற்றவர்களாகவும் மீடியாக்களிலும், விளம்பரங்களிலும் சித்தரிக்கப் படுகின்றனர். இதன் தாக்கமே, சிறு குழந்தைகளிடம் இருந்து, கல்லூரி மாணவி, திருமணமான பெண் என அனை வரிடமும் தொடர்கிறது.ஒரு விஷயத்தை, நாம் அனைவருமே நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நிறமும், அழகும் முதல் ஹலோவுக்கு மட்டும் தான் உதவும். அதன் பிறகு, நாம் பிறரிடம் பழகும் விதம், நம்மிடம் காணப்படும் ஆளுமை, அறிவு, பழக்க வழக்கம் போன் றவை தான், நம்மை வழிநடத்தும். நான் கருப்பானவள், எனவே, விரும்பத்தகாதவள், என்ற எண்ணத்தை உங்கள் மனதில் நீங்களாகவே வளர்த்துக் கொள் ளும் போது, அந்த நினைப்பே, உங்களை சமூகத்திலிருந்து அன்னியப்படுத்திவிடும். இப்படிப்பட்ட ஒதுக்கத்தை நீங்கள் உணரும் போது, உங்கள் திறமைகளை, அறிவை வெளிக்கொணர இயலாது. எனவே, நிறத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு ஒழியுங்கள். கருப்பு என்பது, வெறுக்கத்தக்க நிறமோ அல்லது அசிங்கமான நிறமோ அல்ல என்பதை உணருங்கள். நம் உடலில் இருக்கும் மெலனின் அளவு தான், நிறங்களை முடிவு செய்கிறது. மேலும், நமது சீதோஷ்ண நிலை காரணமாகவும், நமது நிறம் கறுப்பாகவே இருக்கிறது. தென் இந்தியாவின் நிறம் கருப்பு தான். கருப்பாக இருப்பதன் நன்மை என்ன தெரியுமா? கருப்பு நிற சருமம் வெயிலில் இருந்து நமது உடலைப் பாதுகாக்கும். அதிகப்படியான சூடு நமது உடலை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும். நிறத்தை ஒதுக்கி விட்டு பார்த்தால், பெண்களுக்கு திறமையே கிடையாதா? தங்கள் தனித் திறமை யாலும், கடும் உழைப்பாலும், குணத்தாலும், பொறுமையாலும் பெண்கள் முன்னேறுவதில்லையா? பின் ஏன் இந்த கவலை?வெறும் அழகால், நிறத்தால் எவ்வித பலனுமில்லை. எனவே, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த துறையில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாரிடமும் ப்ளஸ் பாயின்ட் இருக்கும். உங்களுடைய ப்ளஸ் பாயின்ட் என்ன என்பதை கண்டு பிடித்து, அதில் வெற்றி காண முயலுங்கள். உங்களை எப்போதும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்களுடைய தாழ்வு மனப்பான்மைக்கு குட் பை சொல்லிவிட்டு, சுறுசுறுப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் வெல்கம் சொல்லுங்கள். சினேகமாக சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள். பர்சனாலிட்டி தானாக எகிறும்.பிறரிடம் அன்பாகவும், பண் பாகவும் பேசத் துவங்குங்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள். அப்படி இருக்கும் போது, உங்களை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? "கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு...' என்று கூறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள்.

No comments: