
நவாத்: மொபைல் போன் ரீசார்ஜ் செய்ய கட்டணம் வசூலிக்கும் கொடுமை நடக்கிறது; எங்கு தெரியுமா? ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சிபு சோரன் போட்டியிட்டு தோற்ற தொகுதியில் தான்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் , கடந்த சில மாதம் முன் முதல்வராக பொறுப்பேற்றார் சோரன். தாமர் என்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அவர் வெற்றி பெற்றால் தான் முதல்வராக நீடிக்க முடியும். ஆனால், மக்களின் அதிருப்தியால் படுதோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில், மின்சார வினியோகமே இல்லை. பெரும்பாலான பயன்பாட்டுக்கு சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது; சில சாதனங்களை இயக்க, ரீசார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை தான் பயன்படுத்துகின்றனர் மக்கள். மின்சார வினியோகம் இல்லாததால், ரீசார்ஜ் செய்ய ஒவ்வொரு முறையும் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தித்தான் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது. "ரீசார்ஜ் செய்யப்படும்' என்று போர்டு மாட்டி, பெட்டிக்கடைகளில் பிசினசே செய்வதும் வாடிக்கையாகி விட்டது. சில கடைகளில், காலை, மாலை நேரங்களில் மொபைல் போன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து "ரீசார்ஜ்' செய்து போகின்றனர்.
இதுகுறித்து சிலர் கூறுகையில்,"இது தான் எங்கள் விதி. எங்கள் தொகுதியில் மின்சாரம் என்பது அரிய விஷயமாகி விட்டது. எங்கள் தொகுதியில் நின்று முதல்வர் சோரன் வெற்றி பெற்றிருந்தால் மட்டும் மின்சாரத்தை பெற்றுத்தந்து விடவா போகிறார்? எங்கள் மாநில மக்களுக்கு தலைவர்கள் ஹெலிகாப்டரில் வருவதை பார்க்க கூடுவார்களே தவிர, இது போன்ற பிரச்னை பற்றி கவலைப்படுவதே இல்லை. புதிதாக ஆட்சிக்கு வருவோராவது மின்சாரம் கிடைக்க வழி செய்வர் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்' என்று வேதனைப்பட்டனர்.
No comments:
Post a Comment