Wednesday, October 21, 2009

உ.பி.,யில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ‌மோதல்: 22 பேர் பலி ; விசாரணைக்கு உத்தரவு


மதுரா: உத்திர பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக விருந்தாவன் மற்றும் மதுரா ‌மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் இன்னும் ரயில் ‌பெட்டிக்களுக்குள் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஸ் கட்டர்களை பயன்படுத்தி ரயில் பெட்டிகளை உடைத்து பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்தது எப்படி : கோவா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில் புதுடில்லிக்கு 150 கி.மீ., தொலைவில் உள்ள மதுரா ரயில் நிலையத்துகு்கு வந்தது. அப்போது மதுரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மேவார் எக்ஸ்பிரசின் பின்புறம் கோவா எக்ஸ்பிரஸ் மோதியது. இதனால் மேவார் ரயிலின் முன் பதிவு செய்யப்படாத பெட்டி பலத்த சேதத்துக்கு உள்ளானது. மேவார் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி முழுமையாக சேதம் அடைந்தது. 4 பெட்டிகள் தடம் புரண்டன.
மீட்பு புணியில் ராணுவம் : மீட்பு பணியில் 150க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ மருத்து உதவிக்குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபரங்கள் அறிய : பொதுமக்கள் விபத்து குறித்த விபரங்களை அறிய 011 -23740020 ,0565 -1072 (மதுரா ), 0562 -1072 (ஆக்ரா) , 0145-24929692 (ஆஜ்மீர்) , 0429 -2487390 (உதய்ப்பூர்) ஆகிய ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
ரயில் போக்குவரத்து பாதிப்பு : பிசியான ரயில் மார்க்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் ஒரு சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. டில்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் , ஆந்திரபிரதேச எக்ஸ்பிரஸ், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ஆகியன டுண்டலா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. டில்லி - ஆக்ரா இடையேயான பாசஞ்ஜர் ரயில்கள் இன்று காலை 7.10 மணி முதல் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
ரயில் விபத்து குறித்து விசாரணை : மம்தா உத்தரவு இன்று காலையில் மதுரா ரயில் நிலையத்தில் ந‌டந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும் , படு காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் , லேசான காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் நிவாரணம் அளிக்கப்படும் என்றார்.
டிரைவர் சஸ்பெண்ட் : எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல் சம்பவம் தொடர்பாக கோவா எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் ஆர் கே சதுர்வேதி மற்றும் உதவி டிரைவர் லஷ்மி கண்ட் ஆகியோர் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments: