Thursday, October 15, 2009

மீண்டும் முதல்-மந்திரி பிரச்சினை: ஜெகன்மோகன் ரெட்டியுடன் 74 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு; புதுக்கட்சி தொடங்குவாரா?



நகரி, அக். 15-

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த மாதம் 2-ந்தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து நிதி மந்திரியாக இருந்த ரோசையாவை காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்திரியாக நியமனம் செய்தது. இதற்கு ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 140 பேர் கையெழுத்திட்டு ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு போதிய அனுபவம் இல்லை. எனவே அவரை முதல்வர் ஆக்க முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்தது.

காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அறிவிப்பு ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற முதல்-மந்திரி ரோசையாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெகனை முதல்வர் ஆக்கு என்று கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குண்டூர், நந்தியாலா, விஜயவாடா பகுதிகளில் ரோசையா மீது பொது மக்கள் கற்களை வீசினார்கள். இதனால் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவர் செல்லும் இடம் எல்லாம் அவரைச்சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு அதில் இருந்தபடி மக்களிடம் குறை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி வீட்டுக்கு நேற்று பெண் மந்திரிகள் கீதா ரெட்டி, சபீதா ரெட்டி, டி.கே. அருணா, சுனிதா, கொண்டா சுரேகா உள்பட 10 மந்திரிகள் 74 எம்.எல்.ஏ.க்கள், சென்றனர். அவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியுடன் சுமார் 1 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் யாருமே ஜெகனுடன் என்ன பேசினார்கள் என்பது பற்றி வெளியில் சொல்ல மறுத்து விட்டார்கள்.

ஜெகன்மோகன் ரெட்டியை இன்னும் 2 மாதத்திற்குள் முதல்வர் ஆக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் வேறு முடிவு எடுக்க வேண்டி இருக்கும் என்று அவரது தீவிர ஆதரவாளர் ஜூகுடி பிரபாகர்ராவ் மிரட்டல் விடுத்துள்ளார். ஜெகன் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, ஜெகனை முதல்வர் ஆக்காவிட்டால் புதுக்கட்சி தொடங்கியே தீருவோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தற்போது அவருக்கு 140 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. இதனால் அவர் எளிதில் முதல்வர் ஆகி விடுவார்.

ஆந்திர மக்களும் அவரைத்தான் முதல்வர் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காங்கிரஸ் மேலிடம் அவரை முதல்வர் ஆக்க தயக்கம் காட்டினால், மாநிலத்தில் காங்கிரஸ் பலவீணம் அடைந்துவிடும். எதிர்க்கட்சிகள் பலம் பெற்று ஆட்சியை எளிதில் பிடித்து விடும் என்றார்.

நடிகர் ராஜசேகர் கூறும்போது, ஜெகனை முதல்வர் ஆக்க காங்கிரஸ் எதனால் தயக்கம் காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ரோசையா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடித்தால் காங்கிரஸ் செல்வாக்கு முற்றிலும் சீர்குலைந்துவிடும். அடுத்த தேர்தலில் சில இடங்களில் கூட காங்கிரஸ் ஜெயிக்க முடியாது.
எனவே அதை கருத்தில் கொண்டு ரோசையாவே தானாக முன்வந்து ஜெகனை முதல்வர் ஆக்கும்படி மேலிடத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


No comments: