
கொழும்பு : இலங்கை சென்றுள்ள தமிழக எம்.பி.,க்கள் குழுவினர் நேற்று, நுவாரா எலியா மற்றும் ஹட்டன் நகரத்திற்குச் சென்று, அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினர். இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் அறிந்து வர, தமிழக எம்.பி.,க்கள் குழு, ஐந்துநாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளது. இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில், நேற்று இலங்கையில் தேயிலை பயிரிடும் முக்கிய பகுதியான, அந்நாட்டின் மத்திய மகாணத்தில் அமைந்துள்ள நுவாரா எலியா பகுதிக்கு சென்றனர். அங்குள்ள இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினர். அவர்களின் வாழ்க்கை நிலவரம் பற்றி கேட்டறிந்தனர். இங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் எல்லாம் 19வது நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள். நுவாரா எலியாவைப் பார்வையிட்ட பின், சிறிய நகரமான ஹட்டனுக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவினர், அங்குள்ள தொண்டைமான் தொழிற்கல்வி மையத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த மையம் தோட்டத் தொழிலில் உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. இலங்கை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கேயையும் மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்களையும் தமிழக எம்.பி.,க்கள் குழுவினர் இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.
www.dinamalar.com
No comments:
Post a Comment