Tuesday, October 27, 2009

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: “அலை பாயுதே” பாணியில் திருமணம்- “காதல்” படம் போல தாலி அறுப்பு


சென்னை ராமாபுரம் முகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 30). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் மகள் கிருத்திகா (வயது 21)-வுக்கும் காதல் ஏற்பட்டது. கிருத்திகா என்ஜினீயர். கடந்த 2007-ம் ஆண்டு இருவரும் வீட்டிற்கு தெரியாமல் “அலை பாயுதே” சினிமா பாணியில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்டதின் அடையாளமாக ஆனந்தராஜ் கிருத்திகாவுக்கு தாலி கட்டினார். இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளாக கிருத்திகா தனது கழுத்தில் உள்ள தாலியை மறைக்க பெரும்பாடுபட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்க முடிவு செய்தனர்.கடந்த மாதம் 16-ந்தேதி தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற உண்மையை பெற்றோரிடம் போட்டு உடைத்தார். ஆனந்தராஜ் கட்டிய தாலியை காட்டினார்.

அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு தனது கணவர் ஆனந்தராஜ் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அவரது பெற்றோர் முறைப்படி திருமணத்தை சேர்ந்து நடத்துவோம் என சமரசம் பேசினர். அதன்படி கிருத்திகாவை வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.

குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி அடித்து உதைத்தனர். உச்சக்கட்டமாக “காதல்” சினிமா படத்தில் வருவதுபோல, கிருத்திகாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினர்.

ஆனந்தராஜை மறந்து விடும்படியும் வேறு வாலிபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் தொல்லை கொடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த ஆனந்தராஜ் வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருத்திகாவை மீட்டு அவர் விருப்பப்படியே கணவருடன் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு கேட்டும் கிருத்திகா, ஆனந்தராஜ் இருவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று தஞ்சம் அடைந்தனர். போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் மேற்கண்ட விஷயங்களை விரிவாக எடுத்துக்கூறி உள்ளனர்.


பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்வுகளில் காதலனும் கைவிட்ட நிலையில் நம்பி வந்த பெண் நடுத்தெருவில் நிற்பதுடன் பெண்ணின் குடும்பத்திற்கு மட்டும் அவமானத்தை இந்தச் சமுதாயம் வாரி வழங்கும். இந்தச் சிக்கலில் ஆனந்தராஜ் தான் செய்த தவறுகளை உணர்ந்து நடந்து கொண்டுள்ளார். இதை மற்றவர்கள் பார்த்து இனி வரும் காலங்களில் திருமணப் பொறுப்புகளைப் பெற்றோரிடமே விட்டுவிடுங்கள். எத்தனை பேருக்கு மன வருத்தம், தீராத துன்பம், அவமானம்.



No comments: