
நியூயார்க் : "ஆப்கன் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளதை அடுத்து, சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அதிபர் ஹமீத் கர்சாய் என்னிடம் உறுதி அளித்துள்ளார்' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், 54 சதவீத ஓட்டுகளை பெற்று அதிபர் கர்சாய் வெற்றி பெற்றுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாயின; எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்தன.குறிப்பாக, கர்சாயின் முக்கிய போட்டியாளரான அப்துல்லா அப்துல்லா, "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது' என, புகார் தெரிவித்தார்.இது குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக ஐ.நா.,வின் கீழ் செயல்படும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை ஆப்கன் தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ளது. இதில், தேர்தலில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும், பதிவான ஓட்டுகளில் 10 லட்சத்துக்கும் மேலான ஓட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கர்சாய்க்கு விழுந்த ஓட்டு 48 சதவீதமாக குறைந்துள்ளது.அதே நேரத்தில் அவரது போட்டியாளர் அப்துல்லாவின் ஓட்டு சதவீதம் 28ல் இருந்து 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.ஆப்கன் தேர்தல் விதிமுறைப்படி 50 சதவீத ஓட்டுகளை பெற்றவரே அதிபராக முடியும். தற்போது கர்சாயின் ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என, சர்வதேச நாடுகள் அவருக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன.
இது குறித்து ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறுகையில்,
"அதிபர் கர்சாயுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். தேர்தல் சர்ச்சையை பொறுத்தவரை, நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது' என்றார்.
ஆப்கன் அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்,
"மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் கர்சாயும், அப்துல்லாவும் மட்டும் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது. மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து ஆப்கன் தேர்தல் கமிஷன் தான், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்' என்றன.
Source: http://www.dinamalar.com
No comments:
Post a Comment