
மேட்டுப்பாளையம் : ஊராட்சி ஒன்றிய பள்ளி, குடிமகன்களின் திறந்தவெளி "பார்' போல மாறிவிட்டது. இரவில் பள்ளி வளாகத்தில் புகுந்து கும்மாளம் போடும் "குடிமகன்கள்', காலி மது பாட்டில் களை வகுப்பறை முன் போட்டுச் சென்றுவிடுகின்றனர். மறுநாள் காலையில் படிக்க வரும் குழந்தைகள், பாட்டில்களை பொறுக்கி அப் புறப்படுத்தும் அவலம் நடக்கிறது.
கோவை மாவட்டம், சிறுமுகை, லிங்காபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. எஸ்.எஸ்.ஏ., மூலம் இயங்கும் இப்பள்ளியில் 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆறு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு, காந்தையூர், உளியூர் பகுதிகளில் இருந்து ஆதிவாசிகளின் குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். இப்பள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இரவில் பள்ளி வளாகத்தை திறந்த வெளி "பார்' போல மாற்றிவிட்டனர். பிராந்தி பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், பான்பராக் கவர், எச்சில் இலைகளை அப்படியே வகுப்பறை முன் போட்டுச் சென்று விடுகின்றனர்.
காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் தங்களது வகுப் பறை முன் கிடக்கும் பிராந்தி பாட்டில், எச்சில் இலைகள் உள்ளிட்டவற்றை பொறுக்கி, அப்புறப்படுத்திய பிறகே வகுப்பறைக்கு செல்ல முடிகிறது. போதாகுறைக்கு, போதை தலைக்கேறிய "குடிமகன்கள்' காலி மதுபாட்டில்களை சுவற்றின் மீது அடித்து உடைத்து போட்டு விடுகின்றனர். ஆங்காங்கு, கிடக்கும் கண்ணாடி சிதறல்கள் குழந்தைகளின் பாதங்களை கிழிக்கிறது. வெறும் காலுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகள் ரத்த காயத்துடன் பாடம் படித்துச் செல்ல வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: இரவில் பள்ளி வளாகத்தில் கூடும் போதை ஆசாமிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. மது குடிப்பதோடு, வார்த் தைகளால் விவரிக்க இயலாத பாலியல் தொடர்பான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். காலையில் குழந்தைகளை குளிக்க வைத்து, சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பினால், அங்கு சென்று எச்சில் இலைகளை பொறுக்கி போடும் வேலையை செய்ய வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாவிடில், சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு, பெற்றோர் தெரிவித்தனர்.
இது குறித்து, சிறுமுகை பேரூராட்சி தலைவர் உதயகுமார் கூறுகையில், ""பேரூராட்சியில் போதிய நிதி இல்லாததால் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட முடியாமல் உள்ளது. இப்பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்படும்,'' என்றார்.
Source: http://www.dinamalar.com
No comments:
Post a Comment