Friday, October 30, 2009

விமர்சனங்களை தகர்த்த தோனி


நாக்பூர்: நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், 5 வது வீரராக களமிறங்கி சதமடித்த தோனி, தன் மீது எழுந்த விமர்சனங்களை தகர்த்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. வதோதராவில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன் தினம் நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில், இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை எட்டியது. இவ்வெற்றிக்கு இந்திய கேப்டன் தோனி (124 ரன்) அடித்த சூப்பர் சதம் முக்கிய காரணமாக அமைந்தது. "பேட்டிங் ஆர்டர்' பிரச்னை: ஆரம்பக் கட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடித்த தோனி, அதிரடி ஆட்டத்தில் அசத்தினார். ஆனால் கேப்டன் பொறுப்பேற்ற பின், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் அணி தோல்வி அடையும் போது, விமர்சனங்களுக்கு உள்ளானார். தவிர, இவர் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என கங்குலி, கில்கிறிஸ்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அணியின் தேவைக்கேற்ப, தான் செயல்படுவதாக தோனி தெரிவித்து இருந்தார். நாக்பூர் போட்டியில் இதை உண்மையாக்கி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இப்போட்டியில் 5 வது வீரராக களமிறங்கிய இவர், அதிரடியாக ஆடி 124 ரன்கள் குவித்தார். சிறப்பான சதம்: இது குறித்து தோனி கூறியது: ஒரு நாள் போட்டிகளில் 5 வது வீரராக களமிறங்கினால் அதிக ரன்கள் குவிக்க முடியாது. சிறப்பாக ஆடினாலும் 50 அல்லது 60 ரன்கள் தான் குவிக்க முடியும். ஆனால் நாக்பூர் போட்டியில் எனது சதம் சிறப்பானதாக அமைந்தது. இருப்பினும் ஒரு நாள் அரங்கில் நான் பதிவு செய்த 5 சதங்களும் சிறப்பானவை தான். இவ்வாறு தோனி கூறினார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை டில்லியில் நடக்க உள்ளது. --------- அணியில் மாற்றம் இல்லை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" நாக்பூர் போட்டியில் இந்திய அணியினர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தோனியின் அதிரடி அவரது பழைய ஆட்டத்தை நினைவு படுத்தியது. காம்பிர், சேவக் ஆகியோரும் சிறப்பாக ஆடினார்கள். 99 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிய காரியம் அல்ல. இவ்வெற்றி, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட தூண்டுதலாக அமைந்துள்ளது. 3 வது (டில்லி) மற்றும் 4 வது (மொகாலி) ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. இதே அணியே விளையாடும்,'' என்றார். ------------- பெய்ன் நீக்கம் நாக்பூர் போட்டியின் போது,காயமடைந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கிரஹாம் மானோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் தேர்வுக் குழு தலைவர் ஹில்டிச் கூறுகையில்,"" டிம் பெய்னுக்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதில், அறிமுக வீரராக கிரஹாம் மானோ களமிறங்க உள்ளார்,'' என்றார்.

No comments: