Wednesday, October 28, 2009

தீ விபத்துகளை தடுக்க ரசாயன பந்து வருகிறது


சென்னை: தீ விபத்துக்களை தடுக்க தாய்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மோனோ&அமோனியம் பாஸ்பேட் கலந்த ரசாயன பந்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பந்தை தமிழக தீயணைப்பு துறை இயக்குநர் முன்பு அந்நிறுவனத்தின் தென்னிந்திய முகவர் அசோக்மணி நேற்று அறிமுகம் செய்தார். அப்போது, ஒரு இரும்பு அண்டாவில் எரியும் நெருப்பில் அந்த பந்தை போட்டவுடன் குபுகுபுவென புகை கிளம்பியது. தீ அணைந்து விட்டது. இந்த செயல்முறை நிகழ்ச்சிக்குப் பின் தீயணைப்பு துறை இயக்குநர் நட்ராஜ் கூறியதாவது: இப்போது எலைட் என்ற தீயணைக்கும் பந்தை சோதனை செய்தோம். இந்த பந்தில் மோனோ அமோனியம் சல்பேட் நிரப்பப்பட்டுள்ளது. அது 85 டிகிரியில் வெடித்து தீயை அணைக்கிறது. தீயில் போட்ட 3 முதல் 6 விநாடிகளில் பந்து வெடிப்பதால், தீ உடனே அணைக்கப்படும். தீயணைப்பு கருவிகளை பலருக்கு இயக்க தெரிவதில்லை. ஆனால், இந்த பந்தை எளிதாக பயன்படுத்த முடியும். அலுவலகங்களில் இந்த பந்துகளை பொருத்தி வைத்திருந்தால், ஆட்கள் இல்லாத போது தீ பிடித்தால், தானாகவே வெடித்து தீயை அணைத்து விடும். இது பற்றி தொழில்நுட்ப பிரிவினர் சோதனை செய்த பிறகு தீயணைப்பு துறையில் அறிமுகம் செய்வது பற்றி முடிவு செய்யப்படும். இந்த பந்து 5 ஆண்டுகள் வரை இருக்கும். இதன் விலை ரூ.9,000. சென்னையில் 953 குடிசை பகுதிகள் உள்ளன. அதனால், அங்கு பைக்கில் சென்று தீயை அணைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments: