Monday, October 19, 2009

இலங்கைத் தமிழர்களுக்கு சிரமங்கள் உண்டு; ராஜபக்ஷே தந்தது 'டீ' தான் : காங்., எம்.பி.

Dinamalar Comment
by Babu senthil,Iran 10/19/2009 3:13:38 PM IST
அழகிரி அவர்களே! போர் என்ற போர்வையில் முள்ளி வாய்க்காலில் 26,000 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் அநியாயமாகத் தெரியவில்லை, 3,00,000 தமிழ் மக்கள் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் அநியாயமகத் தெரியவில்லை? உங்கள் இந்த உண்மை அறி(ரி)யும் சுற்றுலா, ஓரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய ''தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்'' என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே அமைகின்றது !!!!


செய்தி


இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய தி.மு.க., - காங்., - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடங்கிய எம்.பி.,க்கள் குழு கடந்த 10ம் தேதி இலங்கைக்கு சென்றது. அக்குழு, ஐந்து நாட்கள் அகதிகள் முகாம்களை பார்வையிட்டு, கடந்த 14ம் தேதி திரும்பியது.இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், கடலூர் தொகுதி எம்.பி.,யுமான கே.எஸ்.அழகிரி, "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இலங்கைத் தமிழர்களின் முகாம்களை பார்வையிட்டு தாயகம் திரும்பிய தி.மு.க., - காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழுவின் உண்மையான நோக்கம் வெற்றி பெற்றதாக கருதுகிறீர்களா?
இலங்கைத் தமிழர்களுக்கு மாபெரும் கொடுமை நடக்கிறது என்று ஒருதரப்பில் கூறப்பட்டது. இதை, எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முனைந்தனர். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் நல்ல முகாம்களை தான் எங்களுக்கு காட்டுவர், சிரமம் உள்ள முகாம்களை காட்ட மாட்டார்கள் என்ற அச்சம் எங்களுக்கும் ஏற்பட்டது.அப்படி எதுவும் நடக்கவில்லை. வவுனியா காட்டில் 2,500 ஏக்கர் நிலத்தில் எட்டு முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த முகாம்களில் எங்களை இஷ்டம் போல் பார்வையிட அனுமதித்தனர்.
இலங்கை ராணுவத்தினரின் துன்புறுத்தல் குறித்து நீங்கள் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் புகாராக தெரிவித்தனரா?உண்மை கண்டறியும் குழுவாக நாங்கள் சென்றிருந்ததால் உண்மையை அறிய விரும்பினோம். இலங்கைத் தமிழர்களை உதாசீனப்படுத்தவில்லை; துன்புறுத்தவும் இல்லை. அவர்கள் வசிக்கும் கூடாரம், ஐ.நா., அமைப்புகளால் தான் கட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசு கட்டிக் கொடுக்கவில்லை.பொருட்களை வழங்குவதிலும், வாகனங்களை ஓட்டுவதிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐ.நா., குழுவினர் தான் பணியாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் சப்ளை சரியாக இல்லை என்ற குறை இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு மனிதருக்கு 10 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. நிறைவும் இருக்கிறது; குறைவும் இருக்கிறது.
முள்வேலியில் இலங்கைத் தமிழர்கள் சிக்கி தவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பற்றி?இரண்டாயிரத்து 500 ஏக்கர் நிலத்திற்கு பாதுகாப்பு தேவை என்ற அடிப்படையில் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு குடியமர்த்த வேண்டும் என்ற உணர்வு உள்ளது.முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை, ஐந்தாயிரம் பேர் வீதம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்கின்றனர். மழைக் காலம் ஆரம்பிப்பதற்குள் இந்த பணி முடிய வேண்டும். மாவட்ட நிர்வாகம் வீடுகள் கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. உலக நாடுகள் அதற்கான உதவிகளை செய்து வருகின்றன. இலங்கை அரசும் உதவி செய்யும். நாங்கள் பார்த்த எட்டு முகாம்களில் துன்புறுத்தல் இல்லை. ஆனால், சிரமங்கள் உள்ளன.
ராஜபக்ஷே அளிக்கும் விருந்து தேவைதானா என எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதிருப்பது பற்றி?அது விருந்து அல்ல; வெறும் டீயும், சமோசாவும் தான் வழங்கினர்.
எம்.பி.,க்கள் குழு வருகைக்கு இலங்கைத் தமிழ் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறதே?யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த நாட்டின் அதிபர், அமைச்சர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், நிருபர்கள், தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர் கூட முகாம்களுக்கு சென்று பார்க்கவில்லை. ராணுவத்தினர், மாவட்ட கலெக்டர், ஐ.நா., அமைப்பினர் தான் அங்கு செல்கின்றனர்.நாங்கள் வருகிறோம் என தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் ஓடோடி வந்து பார்த்தனர். தங்களை சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் தந்தனர். திருமாவளவன் சில முகாம்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்றார்.அவர் விரும்பிய முகாம்களுக்கும் சென்று பார்த்தோம். சாப்பாட்டிற்கும், மருத்துவத்திற்கும் குறையில்லை. எட்டு முகாம்களில் 121 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். மாணவ, மாணவியர் 58 ஆயிரம் பேர் கல்வி பயில்கின்றனர். ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேர் உள்ளனர்.அனைத்துக் கட்சி எம்.பி.,க்களை ஏன் அழைத்து செல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் குறை கூறியிருப்பது பற்றி?அந்தந்த கட்சிகளின் சொந்த செலவில் தான் நாங்கள் சென்று வந்தோம். வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகளும் தங்களது சொந்த செலவில் சென்று பார்க்க வேண்டியது தானே. படகில் செல்வோம் என பரபரப்பாக பேசினர். இப்போது விமானத்தில் பறந்து சென்று பார்க்க வேண்டியது தானே.இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

No comments: